×

திருவேற்காடு கருமாரியம்மன் கோயிலில் 42 கிலோ எடையுள்ள பொன் இனங்களை பாரத ஸ்டேட் வங்கி மேலாளரிடம் ஒப்படைத்தார் அமைச்சர் சேகர்பாபு

சென்னை: திருவேற்காடு, அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயிலில் 42 கிலோ 991 கிராம் எடையுள்ள பிரித்தெடுக்கப்பட்ட பலமாற்று பொன் இனங்களை பாரத ஸ்டேட் வங்கி மண்டல மேலாளரிடம் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, ஆவடி சா.மு.நாசர் ஆகியோர் ஒப்படைத்தனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு, அருள்மிகு கருமாரியம்மன் திருக்கோயிலுக்கு காணிக்கையாக வரப்பெற்ற 42 கிலோ 991 கிராம் எடையுள்ள பிரித்தெடுக்கப்பட்ட பலமாற்று பொன் இனங்களை தங்க முதலீட்டு பத்திரத்தில் முதலீடு செய்யும் வகையில் உச்ச நீதிமன்ற நீதியரசர் (ஓய்வு) துரைசாமி ராஜு முன்னிலையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு, பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர், ஆகியோர் பாரத ஸ்டேட் வங்கி மண்டல மேலாளரிடம் ஒப்படைத்தனர்.

2021-2022 ஆம் ஆண்டிற்கான  சட்டமன்ற மானியக்கோரிக்கையின் போது, “கடந்த 10 ஆண்டுகளாக திருக்கோயில்களில் காணிக்கையாக வரப்பெற்ற பலமாற்று பொன் இனங்களில், திருக்கோயிலுக்குத் தேவைப்படும் இனங்கள் நீங்கலாக, ஏனைய இனங்களை மும்பையிலுள்ள ஒன்றிய அரசுக்குச் சொந்தமான தங்க உருக்காலையில் உருக்கி, சொக்கத்தங்கமாக மாற்றி திருக்கோயிலுக்கு வருவாய் ஈட்டும் வகையில் வங்கிகளில் முதலீடு செய்து, அதிலிருந்து பெறப்படும் வட்டி மூலமாக திருக்கோயில்களுக்கு திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.

இப்பணிகளை கண்காணிப்பதற்கு 3 மண்டலங்கள் ஏற்படுத்தப்பட்டு, ஓய்வுபெற்ற மாண்பமை நீதியரசர்கள் தலைமையிலான குழுக்கள் மூலம் பணிகள் மேற்கொள்ளப்படும்“ என அறிவிக்கப்பட்டது. இவ்வறிவிப்பினை செயல்படுத்தும் வகையில் சென்னை மண்டலத்திற்கு ஓய்வுபெற்ற மாண்பமை உச்சநீதிமன்ற நீதியரசர் திரு.துரைசாமி ராஜூ அவர்கள் தலைமையில் குழு அரசால் அமைக்கப்பட்டது.
 
அதன்படி விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டம், இருக்கன்குடி அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் மற்றும் திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம், அருள்மிகு பவானியம்மன் திருக்கோயிலுக்கு பக்தர்களால் உண்டியலிலும், காணிக்கையாகவும் செலுத்தப்பட்ட பலமாற்றுப் பொன் இனங்கள் சுத்த தங்கமாக மாற்றப்பட்டு தங்க முதலீட்டுப் பத்திரத்தில் முதலீடு செய்யும் வகையில் பாரத ஸ்டேட் வங்கியில் ஒப்படைக்கப்பட்டது. இதன் மூலம் கிடைக்கப்பெறும் வட்டித்தொகை அந்தந்த திருக்கோயில்களின் மேம்பாட்டிற்காக செலவிடப்படும்.

அதன் தொடர்ச்சியாக, திருவேற்காடு, அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயிலுக்கு  பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்பட்ட  பலமாற்று பொன் இனங்களிலிருந்து கற்கள், அழுக்கு, அரக்கு மற்றும் இதர உலோகங்களை  நீக்கி, நிகர பொன்னினை கணக்கிடும் பணியானது ஓய்வு பெற்ற மாண்பமை உச்சநீதிமன்ற நீதியரசர் திரு.துரைசாமி ராஜு அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

அதன்படி திருக்கோயிலுக்கு பயன்படுத்த இயலாத நிலையில் கிடைக்கப்பெற்ற பலமாற்று பொன் இனங்கள் மொத்த எடை 42990.900 கிராமினை சுத்த தங்கமாக மாற்றி  தங்க முதலீட்டு பத்திரத்தில் முதலீடு செய்யும் வகையில் உச்ச நீதிமன்ற நீதியரசர் (ஓய்வு) துரைசாமி ராஜு முன்னிலையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு, பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் ஆகியோர் பாரத ஸ்டேட் வங்கியில் ஒப்படைக்கும் வகையில் அதன் அம்பத்தூர் மண்டல மேலாளர்  ராஜலட்சுமி அவர்களிடம் வழங்கினர்.

அதனைத் தொடர்ந்து பௌர்ணமி தினத்தை முன்னிட்டு, இத்திருக்கோயிலில் 108 சுமங்கலி பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜையில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆணையர் (நிர்வாகம்) இரா.கண்ணன், திருவள்ளூர் சார் ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி, வேலூர் மண்டல இணை ஆணையர் சி.லட்சுமணன், திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் என்.கே.மூர்த்தி, திருவேற்காடு நகரமன்றத் தலைவர் என்.இ.கே.மூர்த்தி, திருக்கோயில் அறங்காவலர் உறுப்பினர்கள்பி.ஏ.சந்திரசேகர செட்டி, பி.கோவிந்தசாமி, கே. வளர்மதி, பி.சாந்தகுமார், திருக்கோயில் துணை ஆணையர்/செயல் அலுவலர் ஜி.ஜெயப்பிரியா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Minister ,Shekhar Babu ,State Bank of India ,Thiruvekadu Karumariamman , Minister Shekharbabu handed over gold coins weighing 42 kg to State Bank of India manager at Thiruvekadu Karumariamman temple.
× RELATED எஸ்பிஐ-யில் ஆண்டு வைப்புத்தொகை வட்டி 0.25% உயர்வு!!