×

வேப்பம்பட்டு சம்பவத்தில் திருப்பம்; ரவுடிகள் என்று பெயர் எடுக்கவே வாலிபரை வெட்டி கொன்றோம்: 3 பேர் திடுக்கிடும் தகவல்கள்

திருவள்ளூர்: ரவுடிகள் என்று பெயர் எடுக்கவே வாலிபரை வெட்டிக்கொலை செய்தோம் என்று கைதான 3 பேர் திடுக்கிடும் தகவல் தெரிவித்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் செவ்வாப்பேட்டை காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட வேப்பம்பட்டு  அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர்கள் முருகேசன் (38), தேவா (40). இவர்கள் இருவரும் நேற்று மாலை வேப்பம்பட்டில் இருந்து  செவ்வாப்பேட்டை நோக்கி டன்லப் நகர் அயத்தூர் சாலையில் பைக்கில் சென்றனர். அப்போது ஒரே பைக்கில் வந்த மூன்று பேர், முருகேசனை மறித்து கழுத்து, தலை, கை, கால்களில் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர். இதில் நிகழ்வு இடத்திலேயே முருகேசன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றி ஆவடி சரக காவல் உதவி ஆணையர் முத்துவேல்பாண்டி, செவ்வாப்பேட்டை இன்ஸ்பெக்டர் பாஸ்கர் ஆகியோர் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி, முருகேசன் உடலை பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதன்பிறகு கொலை சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தினர். இதையடுத்து சரவணன் (23), பார்த்திபன் (22) மற்றும் இவர்களது கூட்டாளியான திருவள்ளூர் எம்ஜிஆர் நகரை சேர்ந்த வினோத்குமார் (24) ஆகிய 3 பேரை கைது செய்தனர். இவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

கடந்த 2020ம் ஆண்டு முருகேசனுக்கும் சரவணன், பார்த்திபன் ஆகியோருக்கும் இடையே  தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த சமயத்தில் முருகேசனை கத்தியால் குத்த முயன்றபோது அதை பிடுங்கிய முருகேசன் அந்த கத்தியால் பார்த்திபன்,  முருகேசன் ஆகியோரை சரமாரியாக குத்திவிட்டு தப்பிவிட்டார். இதில் பலத்த காயம் அடைந்த அவர்கள் சிகிச்சை பெற்று குணமானார்கள். இதன்பிறகு பழிக்குப்பழியாக முருகேசனை கொலை செய்ய திட்டமிட்டனர். இதற்காக பல சந்தர்ப்பங்களை அவர்கள் எதிர்பார்த்து இருந்துள்ளனர். இந்த நிலையில்தான் சம்பவத்தன்று முருகேசனை வெட்டிக் கொலை செய்துள்ளனர். இவ்வாறு தெரியவந்துள்ளது.

இதையடுத்து மூவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, ‘’செவ்வாப்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வேப்பம்பட்டு பகுதியில் பெரிய ரவுடிகளாக தங்களை காட்டிக்கொள்வதற்காகவே முருகேசனை கொலை செய்தோம். இதன்மூலம் மக்கள் எங்களை கண்டு பயப்படுவார்கள் என்று நினைத்தோம்’ என்று சரவணன், பார்த்திபன், வினோத் குமார் ஆகியோர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட 3 பேரையும் திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : Vepampatu , A twist in the Vepampatu incident; A teenager was hacked to death just because he was called a raider: 3 shocking facts
× RELATED வேப்பம்பட்டு ரயில் நிலையம் அருகில்...