×

விளைநிலங்களில் மருந்து தெளிக்க மானிய விலையில் ‘டிரோன்’ வழங்கப்படுமா?

*விவசாயிகள் எதிர்பார்ப்பு

கோவில்பட்டி : தூத்துக்குடி மாவட்டத்தில் விளைநிலங்களில் மருந்து தெளிக்க மானிய விலையில் ‘டிரோன்’ வழங்கப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பாண்டு புரட்டாசி பட்டத்தில் விவசாயிகள் உளுந்து, பாசி, கம்பு, மக்காச்சோளம், வெள்ளைச்சோளம், பருத்தி, மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி, குதிரைவாலி, சூரியகாந்தி போன்ற பல்வேறு பயிர்கள் பயிரிட்டனர். கோடை மழை மற்றும் ஆவணி மாத கடைசியில் சில கிராமங்களில் பெய்த மழையை நம்பி விவசாயிகள் விதைத்தனர். விதைத்த நாளில் இருந்து சுமார் 35 நாட்கள் மழை பெய்ய வில்லை. இதனால் நிலத்திற்கடியில் இருந்த விதைகள் கெட்டு விட்டன. மீண்டும் விதைப்பு செய்யப்பட்டது.

கடந்த சில தினங்களாக பெய்து வரும் வடகிழக்கு பருவ மழைக்கு முளைத்து பயிர்களை வளர்ந்து வருகிறது. அவ்வப்போது மழை பெய்வதால் களை அதிகமாக முளைத்து வருகிறது. நிலங்களில் அதிக ஈரப்பதம் காணப்படுகிறது. இதனால் நிலங்களில் இறங்கி பணி செய்ய முடியாததால் களை எடுக்க முடியாமல் பயிர்களை விட களை உயரமாக வளர்ந்து விட்டது.
பயிர்களை காப்பாற்ற களை மருந்துகள் கை தெளிப்பான் மற்றும் விசை தெளிப்பான் மூலம் தெளித்து வருகின்றனர். இதற்கு கூலி ஆட்கள் அதிகம் தேவைப்படுவது மட்டுமின்றி ஆட்கள் சம்பளம் உயர்ந்து வேலை ஆட்கள் பற்றாக்குறையும் கடுமையாக உள்ளது.

 இதனிடையே ஆட்கள் பற்றாக்குறை மற்றும் செலவுகளை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த 3 ஆண்டுகளாக மேலை நாட்டு தொழில் நுட்பத்துடன் தயாரிக்கப்பட்ட ஆளில்லா சிறிய வடிவிலான பறக்கும் டிரோன் மூலம் விவசாயிகள் தங்கள் நிலங்களில் மருந்து தெளித்து வருகின்றனர். இதனால் செலவு மிகவும் குறைவாக ஏற்படுகிறது. வரும் காலத்தில் மருந்து தெளிப்பதற்கும் அதிக அளவில் ட்ரோன் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படும்.

 எனவே, இவ்வாறு விளைநிலங்களில் டிரோன் எனப்படும் ஆளில்லா குட்டி விமானம் மூலம் மருந்து தெளிப்பதற்கு ஏதுவாக டிரோன் வாங்க விவசாயிகளுக்கு மானியம் வழங்க அரசு முன்வர வேண்டும் என கரிசல் பூமி விவசாயிகள் சங்கத்தலைவர் வரதராஜன் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதே எதிர்பார்ப்பில் விவசாயிகள் இருந்து வருகின்றனர்.

Tags : Kovilpatti: Will 'Drone' be provided at subsidized cost to spray crops in Thoothukudi district? as farmers
× RELATED அறிவியல்பூர்வ ஆய்வு நடத்தாமல்...