×

குடியிருப்புகளை வெள்ளம் சூழ்வதை தடுக்க புத்தேரியில் இருந்து கீழ்கட்டளை ஏரிக்கு உபரிநீர் செல்ல கால்வாய்: அமைச்சர் கே.என்.நேரு உறுதி

தாம்பரம்: தாம்பரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஆண்டுதோறும் மழைக்காலங்களில் குடியிருப்பு பகுதிகளை தண்ணீர் சூழ்வதுடன், வீடுகளில் தண்ணீர் புகுந்து பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்தவுடன் மழை பாதிப்புகள் ஏற்படும் பகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டு மழைக்காலத்திற்கு முன்பு மழைநீர் வெளியேறும் விதமாக மழைநீர் கால்வாய்களை அமைக்க வேண்டும், குடியிருப்பு பகுதிகளில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்காதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து நிரந்தர தீர்வு காண வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகள் முழுவதும் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு மழைநீர் கால்வாய்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளில் பெரும்பாலான பணிகள் முடிவடைந்து விட்டதால் தற்போது பெய்த மழையில் எந்த பகுதியில் பாதிப்பு ஏற்படவில்லை. இந்நிலையில் பல்லாவரம், தாம்பரம் பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால்வாய் பணிகளை நேற்று முன்தினம் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.

அதனை தொடர்ந்து நேற்று நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு ஆகியோர் மேற்கண்ட பகுதிகளில் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டனர். முதலில் பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் புத்தேரியில் இருந்து வெளியேறும் உபரி நீர் செல்லும் இடங்களை ஆய்வு செய்தனர்.

அப்போது அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களிடம் கூறியதாவது:
ஒவ்வொரு ஆண்டும் மழை காலங்களின் போது புத்தேரியில் இருந்து வெளியேறும் உபரிநீர் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்து நிற்கும் நிலை உள்ளது. இதை தவிர்க்க ஏரியிலிருந்து வெளியேறும் உபரி நீர் கீழ்கட்டளை ஏரிக்கு செல்லும் விதமாக கால்வாய் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் அவ்வாறு கால்வாய் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள வழியில் சுமார் ஒரு ஏக்கர் அளவில் ரூபாய் 35 கோடி மதிப்புள்ள தனியார் நிலங்கள் உள்ளன. எனவே தனியார் நிலங்களை கையகப்படுத்தி அவ்வழியாக கால்வாய் அமைக்கும் பட்சத்தில் குடியிருப்பு பகுதிகளில் மழை காலங்களின் போது தண்ணீர் தேங்கி நிற்காது. மற்ற பகுதிகளிலும் பொதுமக்களுக்கு நிலத்தடி நீர் கிடைக்கும்.

ஏற்கனவே இங்கு தலைமைச் செயலாளர் இறையன்பு ஆய்வு செய்து சென்றுள்ளார். இந்த கால்வாய் பணிகள் அடுத்த ஆண்டு முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வரும். இந்த கால்வாய் அமைப்பதற்கான திட்ட மதிப்பீடு தயாராகிக் கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து, சேலையூர் ஐஏஎப் சாலையில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் கால்வாய் பணிகள், டிடிகே நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கட் அண்ட் கவர் கால்வாய் பணிகள் ஆகியவற்றை ஆய்வு செய்தார். டிடிகே நகர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டபோது அப்பகுதியில் உள்ள கோயில் நிலத்தில் உள்ள இடத்தை விளையாட்டு மைதானமாக மாற்றி தர பரிந்துரைக்குமாறு தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா கேட்டுக்கொண்டார்.

ஆய்வின்போது எம்எல்ஏக்கள் தாம்பரம் எஸ்.ஆர்.ராஜா, பல்லாவரம் இ.கருணாநிதி, தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன், துணை மேயர் கோ.காமராஜ், மண்டல குழு தலைவர்கள் டி.காமராஜ், எஸ்.இந்திரன், இ.ஜோசப் அண்ணாதுரை, வே.கருணாநிதி, ஜெயபிரதீப் சந்திரன், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத், தாம்பரம் மாநகராட்சி ஆணையர் இளங்கோவன், செயற்பொறியாளர் முருகேசன், தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் செல்வகுமார் உட்பட ஏராளமான அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags : Putheri ,Kilikattalai ,Minister ,KN Nehru , Flooding in residences, Putheri to Kilikattalai lake, surplus water channel, Minister K.N. Nehru confirmed
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...