×

திருச்செந்தூரில் இஸ்ரோ செயற்கைக்கோள் ஏவுதளம் நிலம் கையகப்படுத்த ஓராண்டு அவகாசம்: அரசு உத்தரவு

சென்னை: திருச்செந்தூரில் இஸ்ரோவின் சிறியரக செயற்கைக்கோள் ஏவுதளத்துக்காக நிலம் கையகப்படுத்துவதற்கான கால அவகாசத்தை மேலும் ஓராண்டு நீட்டித்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ச.கிருஷ்ணன் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: இஸ்ரோ நிறுவனம் சிறிய ரக செயற்கைகோள் ஏவுதளம் அமைப்பதற்கு தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டத்தில் உள்ள மாதவன்குறிச்சி கிராமத்தில் அலகு 6-ல் தொகுதி 1 முதல் 11 வரையில் உள்ள 110.96.34 ஹெக்டேர் புன்செய் நிலங்களை கையகப்படுத்துவதற்கும், அதில் நியாயமான இழப்பீட்டை பெறுவதற்கும், அதற்கான அறிவிக்கையை அரசிதழில் சிறப்பு வெளியீடாக வெளியிடுவதற்கும் அனுமதி அளித்து அரசு உத்தரவிடுகிறது.

நிலத்தின் மதிப்பு வெவ்வேறாக இருப்பதால் அந்த புல எண்ணில் உள்ள நில உரிமைதாரர்களுக்கு இழப்பீட்டுத் தொகையை ஒரே சீராக நிர்ணயம் செய்ய இயலாது என்றும் எனவே அவற்றுக்கு சரியான நில மதிப்பு நிர்ணயம் செய்து தரப்பட வேண்டும் என்றும் நில நிர்வாக ஆணையர், பதிவுத் துறைத் தலைவரிடம் 2021-ம் ஆண்டு அக்டோபரில் கூறியிருந்தார். நிலங்களுக்கான தீர்வு ஆணை 31.10.2022 தேதிக்குள் பிறப்பிக்கப்படாவிட்டால் நிலம் கையகப்படுத்தும் அனைத்து நடவடிக்கைகளும் காலாவதி ஆகிவிடும் என்றும் கூறியிருந்தார். மேலும், அலகு 6ன் தொகுதி 11ல் உள்ள 11.44.50 ஹெக்டேர் புன்செய் நிலங்களுக்கு மட்டும் கால அளவை மேலும் ஒரு ஆண்டு நீட்டித்து உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார். அவரது கோரிக்கையை அரசு கவனமுடன் பரிசீலித்து தொகுதி 11க்கு தீர்வு பிறப்பிப்பதற்கான காலத்தை 1.11.2022 முதல் மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டித்து அரசு ஆணையிடுகிறது.

Tags : ISRO ,Tiruchendur , One year to acquire land for ISRO satellite launch pad at Tiruchendur: Govt orders
× RELATED இந்தியாவில் வெப்ப அலையின் தாக்கம்...