×

ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வு: இன்று முதல் அமலுக்கு வருகிறது

சென்னை: தமிழகத்தில் ஆவின் நிறுவனம், 4 லட்சத்து 20 ஆயிரம் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து தினசரி ஏறத்தாழ 40 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து வருகிறது. மேலும் 30 லட்சம் லிட்டர் பாலை நாள்தோறும் பொதுமக்களுக்கு தமிழகம் முழுவதும் விற்பனை செய்கிறது. கிராம அளவில் தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள், மாவட்ட அளவில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்கள், மாநில அளவில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் என்ற மூன்றடுக்கு கட்டமைப்பில் ஆவின் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பசும்பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.32 ஆகவும், எருமைப்பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.41 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது. மேலும், பொதுமக்கள் நலன் கருதி கடந்த ஆண்டு மே மாதம் முதல் அனைத்து பால் வகைகளுக்கான விற்பனை விலை லிட்டர் ஒன்றுக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டது. இந்நிலையில், இடுபொருட்கள் விலையேற்றம், உற்பத்தி செலவினம் ஆகியவை கூடியுள்ளதால், பால் உற்பத்தியாளர்கள் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க கோரிக்கை வைத்திருந்தனர். அதன்படி, பசும்பால் கொள்முதல் விலை இன்று முதல் உயர்த்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் மேலாண்மை இயக்குநர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: பசும் பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.3 அதிகரித்து ரூ.32 லிருந்து, ரூ.35 ஆகவும், எருமைப் பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.3 அதிகரித்து ரூ.41 லிருந்து, ரூ.44 ஆகவும் உயர்த்தப்படுகிறது. மேலும், விலை உயர்வின் காரணமாக ஏற்படும் கூடுதல் செலவினத்தை ஈடு செய்ய விற்பனை விலையை உயர்த்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், விற்பனை விலையை பொறுத்தவரையில் நுகர்வோர்களின் நலன் கருதி சமன்படுத்தப்பட்ட பால் (நீல நிறம்) மற்றும் நிலைப்படுத்தப்பட்ட பால் (பச்சை நிறம்) ஆகியவற்றின் விலையில் மாற்றமின்றி தற்போதைய நிலையே தொடர்கிறது.

தற்போதுள்ள நிறைகொழுப்பு பால் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு எவ்வித விலைமாற்றமின்றி லிட்டர் ஒன்றுக்கு ரூ.46க்கே புதுப்பிக்கப்படும். மேலும், சில்லரை விற்பனை விலையில் விற்கப்படும் நிறைகொழுப்பு பாலின் (ஆரஞ்சு பால் பாக்கெட்) விலை லிட்டருக்கு ரூ.12 அதிகரித்து ரூ.60ஆக விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை மாற்றம் என்பது உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலை உயர்வினை வழங்குவதற்காக ஏற்படும் கூடுதல் செலவினத்தை ஈடுசெய்யும் வகையில் நடைமுறைபடுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

அதன்படி, இந்த விலை மாற்றத்திற்கு பின்னரும் ஆவின் நிறைகொழுப்பு பால் (அட்டை) தனியார் பாலின் விலையை ஒப்பிடுகையில் ரூ.24 குறைவாகவும், சில்லரை விலையில் விற்கப்படும் நிறைகொழுப்பு பால் தனியார் பாலின் விலையை ஒப்பிடுகையில் ரூ.10 குறைவாகவும் இருக்கும். மேலும், உற்பத்தியாளர்களின் நலன் கருதி இந்த விலை மாற்றம் ஏற்படுத்தபட்டுள்ளதால் பொதுமக்கள், சில்லரை விற்பனையாளர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்கள் எப்போதும் போல் ஆவின் நிறுவனத்திற்கு ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Aain , Aa's milk purchase price hiked by Rs 3 per litre: Effective today
× RELATED ஆவின் பால் பண்ணை துணைமேலாளர் உள்ளிட்ட 3பேர் பணியிடை நீக்கம்..!!