டெல்லி செங்கோட்டை தாக்குதல் பாக். தீவிரவாதியின் தூக்கு மீண்டும் உறுதி: மறுசீராய்வு மனு தள்ளுபடி

புதுடெல்லி: பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் இ தொய்பா இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதி முகமது ஆரிப். இவன் கடந்த 2000ம் ஆண்டு, டிசம்பர் 22ம் தேதி டெல்லி செங்கோட்டை மீது தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்டான். அன்றைய தினம் செங்கோட்டைக்குள் புகுந்த தீவிரவாதிகள், ராணுவ முகாம் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். இதில், 3 வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் ஆரிப்புக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதை 2007ம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றமும் உறுதிப்படுத்தியது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஆரிப் மேல்முறையீடு செய்தான். அதை விசாரித்த நீதிமன்றம், ஆரிப்பின் மரண தண்டனையை உறுதி செய்தது.

இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் ஆரிப் மறுசீராய்வு மனு தாக்கல் செய்தான். தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமர்வில் நேற்று இது விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த பிறப்பித்த உத்தரவில், ‘இந்த வழக்கில் மனுதாரரின் குற்றச் செயல் மிகவும் தெளிவாக  நிரூபிக்கப்பட்டு உள்ளது. இதனால், அவருக்கு இந்த நீதிமன்றம் எவ்வித நிவாரணத்தையும் வழங்க முடியாது. அவருடைய மறுசீராய்வு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது,’ என தெரிவித்தனர். இதன்மூலம், ஆரிப்பின் மரண தண்டனை மீண்டும் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து, ஜனாதிபதிக்கு கருணை மனு அளிக்கும் வாய்ப்பு அவனுக்கு உள்ளது.

Related Stories: