×

8ம் தேதி சந்திர கிரகணம் திருப்பதி ஏழுமலையானை அரை நாள் பார்க்க முடியாது: அனைத்து தரிசனமும் ரத்து

திருமலை: சந்திர கிரகணத்தை முன்னிட்டு வரும் 8ம் தேதி திருப்பதி ஏழுமலையான் கோயில் அரைநாள் மூடப்பட உள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு; திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 8ம் தேதி  சந்திர கிரகணத்தை முன்னிட்டு, 12 மணி நேரம்  நடை மூடப்பட உள்ளது. சந்திர கிரகணம் பிற்பகல் 2.39 முதல் 6.19 வரை இருக்கும் என்பதால் கோயில் காலை 8.40 மணிக்கு நடை மூடப்பட்டு இரவு 7.20 மணிக்கு திறக்கப்படும். இதனால்  விஐபி தரிசனம், ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கான விஐபி, ரூ.300 சிறப்பு நுழைவு தரிசனம், நேர ஒதுக்கீடு செய்யப்படும் இலவச தரிசன டிக்கெட், கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரமோற்சவம் மற்றும் சகஸ்ர தீப அலங்கார சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதேபோல், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் கைக்குழந்தைகளுடன் உள்ள பெற்றோர்கள், வெளிநாட்டு இந்தியர்கள், பாதுகாப்பு பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து சலுகை பெற்ற தரிசனங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. கிரகணம் முடிந்த பிறகு இலவச தரிசனத்தில் மட்டுமே வைகுண்ட வளாகம் 2ல் இருந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். வழக்கமாக கிரகண நாட்களில் கிரகணம் முடியும் வரை சமையல் செய்ய மாட்டார்கள். அதனால்,  அன்னபிரசாத கூடமும் கிரகணம் முடியும் வரை மூடப்பட்டிருக்கும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : 8th Tirupati Seven Hills , Lunar Eclipse on 8th Tirupati Seven Hills cannot be seen for half a day: All darshan is cancelled
× RELATED 2025-26ம் ஆண்டில் இருந்து சிபிஎஸ்இயில்...