×

ராஜஸ்தான் காங்.கில் பூசல் ஆரம்பம் கெலாட் ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை பாயும்: சச்சின் பைலட் அதிரடி

ஜெய்ப்பூர்: ‘ராஜஸ்தானில் கட்சிக்கு எதிராக கலகம் செய்த எம்எல்ஏக்கள் மீது காங்கிரஸ் விரைவில் நடவடிக்கை எடுக்கும்’ என்று கட்சியின் மாநில தலைவர் சச்சின் பைலட் தெரிவித்துள்ளார். ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் இடையே நீண்டகாலமாக மோதல் போக்கு நிலவி வருகின்றது.

இந்நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலின்போது மாநிலத்தில் உட்கட்சி பூசல் வெடித்தது.  தலைவர் தேர்தலில் கெலாட் போட்டியிட இருந்த நிலையில், அவருக்கு பதிலக சச்சின் பைலட்டை புதிய முதல்வராக்க கூடாது என்று கெலாட் ஆதரவு எம்எல்ஏக்கள் கலகக்குரல்  எழுப்பினார்கள். மேலும் சிலர் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தனர். கட்சி தலைமையின் சமரசத்தை அடுத்து இந்த பிரச்னை முடிவுக்கு வந்தது. இந்நிலையில் அங்கு உட்கட்சி பூசல் மீண்டும் வெடித்துள்ளது.

கெலாட் ஆதரவு எம்எம்ஏக்களுக்கு கட்சி தலைமை நோட்டீஸ் தந்தது தொடர்பாக சச்சின் பைலட் கூறுகையில், ‘‘காங்கிரஸ் சட்டமன்ற குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை போன்று காங்கிரஸ் கட்சியும் விரைவில் முடிவு எடுக்கும். விதிகள் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை கட்சியில் உள்ள அனைவருக்கும் பொருந்தும். கட்சி சார்பில் ஒழுங்கு நடவடிக்கை நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ள அனைவர் மீதும் கட்சி விரைவில் நடவடிக்கை எடுக்கும்’’ என கூறி உள்ளார்..

*பிரதமர் பாராட்டு குறித்து சந்தேகம்

ராஜஸ்தானில் நேற்று முன்தினம் மான்வார் தாம் பழங்குடியினர் நிகழ்ச்சியில் பிரதமர் மோடியும், ராஜஸ்தான் முதல்வர் கெலாட்டும் பங்கேற்றனர். அந்த மேடையில் பேசிய பிரதமர் மோடி, ‘‘நான் குஜராத் முதல்வராக இருந்த போது, ராஜஸ்தான் முதல்வராக கெலாட் இருந்தார். முதல்வராக அவருடன் இணைந்து பணியாற்றி உள்ளேன். தற்போதுள்ள பல முதல்வர்களின் மிக மூத்தவர் கெலாட்’’ என புகழ்ந்தார். இது குறித்து சச்சின் பைலட் கூறுகையில், ‘‘பிரதமர் மோடி ராஜஸ்தான் முதல்வரை பாராட்டியுள்ளார். இதற்கு முன் குலாம் நபி ஆசாத்தை பிரதமர் பாராட்டினார். பின்னர் அவர் காங்கிரசை விட்டே சென்று விட்டார்” என்றார்.


Tags : Rajasthan ,Cong.Kil ,Gehlot ,Sachin Pilot , Rajasthan, Riots start, Gelat supporter, Action on, Sachin Pilot, Action
× RELATED ராஜஸ்தான் மாநிலம் ஜலாவார்...