புதுச்சேரி மிஷன் வீதியில் கல்லறை திருநாளுக்காக குவிந்த பெங்களூர் “கலர்புல்” பூக்கள்

புதுச்சேரி : புதுவையில் கல்லறை திருநாளுக்காக பெங்களூருவில் இருந்து பலவண்ண  பூக்கள் மிஷன் வீதி மற்றும் மார்க்கெட்டுகளில் விற்பனைக்கு வந்துள்ளன.

  உலகம் முழுவதும் கிறிஸ்தவர்களால் இன்று (நவ.2ம்தேதி) கல்லறை திருநாள்  அனுசரிக்கப்படுகிறது. அன்றைய தினம் ஒவ்வொரு குடும்பத்தினரும் தங்கள்  குடும்பங்களில் மரித்த முன்னோர்களின் கல்லறைக்கு சென்று இறந்த  ஆன்மாக்களுக்காக பிரார்த்தனை செய்வது வழக்கம்.

அன்று கத்தோலிக்க  தேவாலயங்களில் சிறப்பு திருப்பலியும் நிறைவேற்றப்படுகிறது. இதனிடையே கல்லறை  திருநாளுக்காக பெங்களூருவில் இருந்து புதுச்சேரிக்கு விதவிதமான நிறங்களில்  கல்லறை பூக்கள் விற்பனைக்கு குவிந்துள்ளன. மிஷன் வீதி, மார்க்கெட்,  நெல்லித்தோப்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கல்லறை திருநாள் பூக்கள்  சாலையோரம் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. அங்கு வியாபாரம் விறுவிறுப்பாக  நடைபெற்று வருகிறது.

பெங்களூரு ஸ்பெஷலான ரோஸ் மற்றும் வெள்ளை நிற  கல்லறை பூக்கள் ஒரு கட்டு ரூ.120 முதல் ரூ.240 வரை தரத்திற்கு ஏற்ப  விற்கப்படுகிறது. புளுடெய்ஸி, ஆஸ்ட்ரெஸ் பூக்கட்டுகள் ரூ.125 முதல் ரூ.250  வரையிலும் விற்கப்பட்டன. ரோஜாப்பூ ரூ.120க்கும், சாமந்தி, மல்லி, அரளி கலவை  கிலோ ரூ.160க்கும் விற்பனை செய்யப்பட்டன. கிறிஸ்தவர்கள் முன்கூட்டியே  அவற்றை வீடுகளுக்கு வாங்கிச் சென்றனர். இப்பூக்களை தங்கள் உறவினர்களின்  கல்லறைகளில் நாளை தூவி பிரார்த்தனை செய்ய உள்ளனர்.

இதற்காக மெழுகுவர்த்தி,  சாம்பிராணி, மாலைகள், உதிரிப்பூக்கள் விற்பனையும் சூடுபிடித்தது. இந்தாண்டு  கர்நாடகாவில் கனமழை காரணமாக கல்லறை திருநாளுக்கான பூ வியாபாரம் குறைவாகவே  இருந்தது. புதுவையில்  நேற்று காலை முதலே மழை பெய்வதால் வியாபாரம் மந்தமாக  நடைபெற்றன. இன்று வியாபாரம் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: