×

ஆந்திராவில்3 தலைநகர் வழக்கில் இருந்து தலைமை நீதிபதி யு.யு.லலித் விலகல்

புதுடெல்லி: ஆந்திராவில் 3 தலைநகரம் அமைக்கும் வழக்கின் விசாரணையில் இருந்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித் விலகியுள்ளார். ஆந்திராவில் இருந்து தெலங்கானா மாநிலம் பிரிக்கப்பட்ட பிறகு, ஆந்திராவுக்கென அமராவதியில் தலைநகரம் அமைக்க, அப்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு நடவடிக்கை எடுத்தார். அதன் பிறகு நடந்த தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வெற்றி பெற்று, ஜெகன் மோகன் ரெட்டி முதல்வராக பொறுப்பேற்றார். அவர் ஆந்திராவுக்கு 3 தலைநகரங்கள் அமைக்கப்படும் என அறிவித்தார். இதற்கு, அமராவதியில் தலைநகர் அமைப்பதற்கு நிலம் கொடுத்த விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இவர்கள் 3 தலைநகர திட்டத்தை எதிர்த்து தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 3 தலைநகர திட்டத்துக்கு தடை விதித்தது. மேலும், அமராவதியில் 6 மாதத்துக்குள் புதிய தலைநகரை அமைக்கும்படியும் உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஆந்திர அரசு மேல்முறையீடு செய்துள்ளது. தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதி திரிவேதி அமர்வில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘நான் வழக்கறிஞராக இருந்தபோது ஆந்திர மாநிலத்தை பிரிப்பது தொடர்பாக சட்ட ஆலோசனைகள் வழங்கினேன். எனவே, இந்த வழக்கு விசாரணையில் இருந்து நான் விலகுகிறேன். நான் இடம் பெறாத வேறு அமர்வுக்கு இந்த வழக்கு மாற்றப்படும்,’ என அறிவித்தார்.


Tags : Chief Justice ,U.U. Lalit ,Andhra Pradesh , Chief Justice U.U. Lalit withdraws from 3 capital cases in Andhra Pradesh
× RELATED உச்சநீதிமன்ற வழக்கு விவரங்கள் இனி...