×

பம்மலில் நடந்த மாநகர சபையில் பங்கேற்பு தாம்பரம் மாநகராட்சிக்கு ஓராண்டில் தினமும் 100 எம்எல்டி தண்ணீர் சப்ளை: அமைச்சர் கே.என்.நேரு உறுதி

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சிக்கு ஓராண்டில் தினமும் 100 எம்எல்டி தண்ணீர் கிடைக்கும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு, கிராம சபை கூட்டங்களை போல நகர சபை கூட்டங்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுபடி தமிழகம் முழுவதும் நேற்று நடந்தன. இதில் தாம்பரம் மாநகராட்சியின் மாநகர சபை கூட்டம் பம்மலில் நடந்தது. நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, ஸ்ரீபெரும்புதூர் எம்பி டி.ஆர்.பாலு, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், பாதாள சாக்கடை திட்டத்திற்கு நிதி ஒதுக்கிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்ததுடன் அந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், கூடுதல் பூங்கா வேண்டும், சாலை வசதிகள், வீட்டுமனை பட்டா, எல்.இ.டி. மின் விளக்குகள், பல்லாவரம் - குன்றத்தூர் சாலையை அகலப்படுத்த வேண்டும், பழுதடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும், கூடுதல் பேருந்து வசதி, குடிநீர் வினியோகம், குடிநீர் குழாய் இணைப்பு, கட்டிடம் கட்டுவது, விதி மீறிய கட்டிடங்கள், தொற்று நோய் தடுப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து கருத்துகள் மற்றும் கோரிக்கை மனுக்களை அமைச்சர்கள் கே.என்.நேரு, தா.மோ.அன்பரசனிடம் பொதுமக்கள் வழங்கினர்.

கூட்டத்தில் அமைச்சர் கே.என் நேரு பேசியதாவது: மழைக்காலம் முடிந்த பிறகு ஓரிரு மாதங்களில் பொதுமக்கள் தெரிவித்த அத்தனை வேலைகளையும் முடித்து தருவதாக அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். பம்மல் பகுதிக்கு மட்டும் தார் சாலை அமைக்க ரூ.20 கோடி முதல்வர் வழங்கியுள்ளார். பாதாள சாக்கடை திட்டப்பணி ரூ.215 கோடியில் நடக்கிறது. தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் உள்ள விளக்குகளை எல்.இ.டி விளக்குகளாக மாற்றியமைக்க ரூ.48.34 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அனைத்து இடங்களிலும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் என்ற முதல்வரின் உத்தரவுப்படி, 150 எம்.எல்.டி கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளது.

தாம்பரம் மாநகராட்சிக்கு மட்டும் தினமும் 25 எம்.எல்.டி தண்ணீர் ஓரிரு மாதங்களில் பொதுமக்களுக்கு வந்து சேரும். மேலும், சுமார் ரூ.5 ஆயிரம் கோடி செலவில் 400 எம்.எல்.டி புதிதாக கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை அறிவித்து டெண்டர் விடப்பட்டுள்ளது. இப்பணிகள் விரைவில்  தொடங்கும். ஓராண்டு காலத்தில் தாம்பரம் மாநகராட்சிக்கு தினமும் 100 எம்.எல்.டி தண்ணீர் நாள் ஒன்றுக்கு கிடைக்கும். இதுபோல அனைத்தையும் நிச்சயமாக, விரைவாக நிறைவேற்றி தருவோம். இவ்வாறு அவர் பேசினார். பின்னர் அமைச்சர் தா.மோ.அன்பரசன், ஸ்ரீபெரும்புதூர் எம்பி டி.ஆர்.பாலு ஆகியோர் பேசினார்.

கூட்டத்தில், எம்எல்ஏக்கள் தாம்பரம் எஸ்.ஆர்.ராஜா, பல்லாவரம் இ.கருணாநிதி, தாம்பரம்  மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன், துணை மேயர் கோ.காமராஜ், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு செயலர் சிவ்தாஸ் மீனா, சென்னை குடிநீர் வடிகால் வாரியம் மேலாண்மை இயக்குநர் கிர்லோஸ் குமார், தமிழ்நாடு வடிகால் வாரியம் மேலாண்மை இயக்குநர் தட்சிணாமூர்த்தி, பேரூராட்சிகளின் ஆணையர் செல்வராஜ், செங்கல்பட்டு மாவட்ட  கலெக்டர் ராகுல்நாத், தாம்பரம் மாநகராட்சி ஆணையர் இளங்கோவன், செயற்பொறியாளர் முருகேசன், மண்டல குழு தலைவர்கள் இ.ஜோசப் அண்ணாதுரை, வே.கருணாநிதி, தாம்பரம் மாநகராட்சி 6வது வார்டு மாமன்ற உறுப்பினரும், பகுதி  சபை தலைவருமான டி.கல்யாணி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தலைவரின் உத்தரவுப்படி, 150 எம்.எல்.டி கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளது.

Tags : Municipal Council ,Pammal ,Tambaram Corporation ,Minister ,KN Nehru , Participation in Municipal Council held at Pammal 100 mlt water supply per day to Tambaram Corporation in one year: Minister KN Nehru assured
× RELATED உடல் பருமன் குறைப்பு...