×

செய்யாறு அருகே செய்யாற்றை வென்றானில் பல்லவர் கால கொற்றவை சிலை கண்டெடுப்பு

செய்யாறு: செய்யாறு அடுத்த செய்யாற்றை வென்றான் கிராம குளக்கரை அருகில் பல்லவர் கால புடைப்பு சிற்பமான  கொற்றவை சிலை கண்டெடுக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், செய்யாற்றை வென்றான் கிராமத்தின் நெடுஞ்சாலையோரம் பழமையான குளம் உள்ளது. அதன் கிழக்கு பகுதியில் உள்ள நிலத்திற்கு அருகில் செடி, கொடிகள் மூடிய நிலையில் புடைப்பு சிற்பம் மண்ணிற்குள் புதைந்த நிலையில் இருப்பதை வரலாற்று ஆய்வாளர் எறும்பூர் கை.செல்வகுமார் கண்டெடுத்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: இப்பகுதியில் புதிதாக கண்டெடுக்கப்பட்ட இந்த கொற்றவை புடைப்பு சிற்பம் 120 செ.மீ. உயரமும், 95 செ.மீ. அகலமும்  உடையது.

புதைந்த நிலையிலும், பல ஆண்டுகளாக திறந்தவெளியிலும் இருந்ததால் மிகவும் தேய்ந்து போன நிலையில் உள்ளது. நீண்ட கற்பலகையில் கொற்றவை சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. கரண்ட மகுடம், தட்டை காதணிகள், கழுத்தணிகலன், மார்பு கச்சை ஆகிய அடையாளங்களுடன் காணப்படுகிறது. எட்டு கைகளுடன், சங்கு, சக்கரம், வாள், அம்பு, இடுப்பில் கை, வில், கேடயம், அபய முத்திரையுடன் இருக்கிறது. பக்கவாட்டிலும், காலடியிலும் இருக்கூடிய உருவங்கள் தெரியவில்லை. மிகவும் தேய்ந்த நிலையில் காணப்படுகிறது. இந்த புடைப்பு சிற்பத்தின் தன்மை, கலையம்சம் மற்றும் ஒழுங்கு அமைவை வைத்து பல்லவர்கால கொற்றவையாக கருதலாம்.

செய்யாறு பகுதிகளில் கொற்றவை சிற்பத்தை துர்க்கை அம்மனாகவும், திருமாலின் அவதாரமாகவும் பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர். மேலும் கண்டெடுக்கப்பட்ட பல்லவர் கால அரியவகை கொற்றவை சிற்பத்தை குளக்கரையில் நிறுவி தொன்மை வரலாற்றின் அடையாளச் சின்னமாக பாதுகாக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : Pallavar ,Kotavai ,Seiyaru , Pallavar era Kotavai idol found at Seiyaru near Seiyaru
× RELATED உடையார்பாளையம் அருகே பழமையான பல்லவர் கால அய்யனார் சிலை கண்டெடுப்பு