×

கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி; புளியரை சோதனை சாவடியில் தீவிர வாகன சோதனை: அனைத்து வாகனங்களுக்கும் கிருமிநாசினி தெளிப்பு

செங்கோட்டை: கேரளாவில் பறவை காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில், தமிழக எல்லைப் பகுதியான புளியரையில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து வாகனங்களுக்கும் கிருமி நாசினி தெளித்து சுகாதாரப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள பறவை பண்ணைகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாத்துகள் திடீரென அடுத்தடுத்து இறந்தன. தகவலறிந்த கால்நடைத்துறை அதிகாரிகள் இறந்த பறவைகளின் மாதிரிகளை சேகரித்து போபாலில் உள்ள தேசிய உயர் பாதுகாப்பு விலங்குகள் நோய் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பிவைத்தனர். அங்கு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பறவை காய்ச்சல் பாதிப்பால் வாத்துகள் இறந்தது உறுதியானது.

இதையடுத்து மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள பறவை பண்ணைகளில் பராமரிக்கப்பட்டு வந்த வாத்து, கோழிகள் அழிக்கப்பட்டு குழி தோண்டி புதைக்கப்பட்டன. இதனிடையே கேரளாவில் பரவும் பறவை காய்ச்சல் அண்டை மாநிலமான தமிழகத்திற்குள் வராமல் தடுக்க தமிழக  அரசு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. கேரள எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக தமிழக - கேரள எல்லையான தென்காசி மாவட்டம் புளியரை சோதனை சாவடி அருகே கால்நடை துறை அதிகாரிகள் முகாமிட்டுள்ளனர். இவர்கள் கேரளாவில் இருந்து தமிழகத்தின் உள்ளே வரும் வாகனங்களில்  தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

 தென்காசி கலெக்டர் ஆகாஷ் உத்தரவின்பேரிலும், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் பொன்னுவேல், தென்காசி மாவட்ட உதவி இயக்குநர் மகேஸ்வரி அறிவுறுத்தலின் பேரிலும் தென்காசி மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் முகாமிட்டு கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வாத்து, கோழி, முட்டை, கோழித் தீவனங்கள் போன்றவற்றை கொண்டுவரும் வாகனங்களை திருப்பியனுப்பி வருகின்றனர் மேலும் காய்கறி உள்ளிட்ட உணவு பொருட்களை ஏற்றி வரும் அனைத்து கனரக இலகுரக வாகனங்களையும் தடுத்து நிறுத்தி சோதனையிட்டு வாகனங்களின் டயர்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பறவை காய்ச்சல் நோய் கிருமிகளை அழிக்கும் வகையில், கிருமி நாசினி தெளித்து சுகாதாரப் பணிகளை முடுக்கி விட்டுள்ளனர்.

3 மாதங்கள் அமல்
இதுகுறித்து கால்நடை மருத்துவர் ஜெயபால் ராஜா  கூறுகையில் ‘கேரளாவில் பறவை காய்ச்சல் வேகமாகப் பரவி வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு தமிழக எல்லை பகுதிகளில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதையொட்டி புளியரையில்  ஒரு கால்நடை உதவி மருத்துவர், ஒரு ஆய்வாளர், ஒரு கால்நடை பராமரிப்பு உதவியாளர், கிருமி நாசினி தெளிப்போர் இருவர் என மொத்தம் 5 பேர் கொண்ட குழுவினர் 3 ஷிப்டுகளாக  பணியமர்த்தப்பட்டு  கேரளாவில் இருந்து தமிழகம் வரும் வாகனங்களை தீவிரமாக சோதனையிட்டு வருகின்றனர். சோதனையில் கிருமிநாசினி தெளிக்கப்பட்ட பிறகே தமிழக எல்லைக்குள் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன.

இதுபோன்ற வாகன சோதனை இன்னும் 3 மாதங்கள் அமலில் இருக்கும். அத்துடன் கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு  கோழி உணவு, முட்டை, வாத்து, பறவைகள் ஆகியவற்றை கொண்டுவரும் வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றன ’’ என்றார். அப்போது  கால்நடை உதவி மருத்துவர் பானு சுபா, கால்நடை ஆய்வாளர் லதா, கால்நடை பராமரிப்பு உதவியாளர் ஆறுமுகம் மற்றும் கிருமிநாசினி தெளிப்போர் உடனிருந்தனர்.

Tags : Kerala ,Puliarai , Bird flu echoes in Kerala; Intensive vehicle checking at Puliarai check post: Disinfectant spray for all vehicles
× RELATED ஓடும் பஸ்சிலிருந்து கீழே விழ இருந்த வாலிபரை காப்பாற்றிய கண்டக்டர்