நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் நாள் முழுவதும் பக்தர்களுக்கு 3 விதமான பிரசாதம்: இன்று முதல் துவக்கம்

நாமக்கல்: நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில், நாள் முழுவதும் பக்தர்களுக்கு 3 விதமான பிரசாதம் வழங்கும் திட்டம் இன்று(1ம் தேதி) துவங்கப்படுகிறது. தினமும் வெண்பொங்கல், புளியோதரை, சர்க்கரை பொங்கல் ஆகியவை வழங்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பெரிய கோயில்களில், பக்தர்களுக்கு தினமும் பிரசாதம் வழங்கும் திட்டம் துவங்கப்படும் என, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்திருந்தார். இதன்படி, ஏற்கனவே பல்வேறு பெரிய கோயில்களில் இந்த திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.

நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோயில் மற்றும் நரசிம்மசுவாமி கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களுக்கு தினமும் பல்வேறு மாவட்டங்கள்,  வெளி மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்து செல்கிறார்கள். குறிப்பாக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். நரசிம்மசுவாமி கோயிலில் இன்று(1ம் தேதி) முதல், தினமும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கும் திட்டம் துவங்கப்படுகிறது. இன்று காலை 10.30 மணியளவில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, காணொலி மூலம் பிரசாதம் வழங்கும் திட்டத்தை துவக்கி வைக்கிறார்.

இதற்கான ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையர் இளையராஜா மற்றும் கோயில் அலுவலர்கள் செய்துள்ளனர். நாமக்கல் நரசிம்மசுவாமி கோயிலில் நிர்வாகத்தின் கீழ் தான், ஆஞ்சநேயர் கோயில் வருகிறது. தினமும் ஆஞ்சநேயருக்கு கட்டளைதாரர்கள் மூலம், வடைமாலை சாத்துபடி செய்யப்படுகிறது. இந்த பூஜையின் போது, கட்டளைதாரர்களுக்கு 3 விதமான பிரசாதம், கோயில் நிர்வாகத்தின் மூலம் தரப்படுகிறது. பெரும்பாலான கட்டளைதாரர்கள் பிரசாதத்தை கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு கொடுத்து விடுவார்கள்.

மேலும், ஆஞ்சநேயருக்கு உகந்த நாட்களில் பல்வேறு அமைப்புகள் சார்பில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. மற்றபடி கோயிலுக்கு தினமும் வந்துசெல்லும் பக்தர்களுக்கு, துளசி தான் பிரசாதமாக கோயிலில் தரப்படும். தற்போது தமிழக அரசின் உத்தரவுப்படி, தினமும் 3 விதமான பிரசாதம் நாள் முழுவதும் பக்தர்களுக்கு தரப்படுகிறது. இதற்காக நரசிம்மசுவாமி கோயில் வளாகத்தில் உள்ள மடப்பள்ளி அருகில், சமையல்கூடம் அமைக்கப்பட்டு, தினமும் பிரசாரதம் தயாரிக்கப்படுகிறது. தினமும் அதிகாலை 5 மணிக்கு ஆஞ்சநேயர் கோயில் நடை திறக்கப்படும்.

காலை 6 மணி முதல் பகல் 10 மணி வரை, வெண்பொங்கல் பிரசாதமாக தரப்படுகிறது. பின்னர், 10 மணிக்கு மேல் மதியம் நடை சாத்தும் வரை, அதாவது 1.30 மணி வரை, புளியோதரை பிரசாதமாக அளிக்கப்படுகிறது. மாலை 4 மணிக்கு நடை திறக்கும் போது, கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல் தரப்படுகிறது. இரவு கோயில் நடை சாத்தும் வரை பக்தர்கள் சர்க்கரை பொங்கல் பெற்றுச் செல்லலாம்.

மேலும், ஆஞ்சநேயருக்கு உகந்த நாளான சனிக்கிழமைகளில், பக்தர்களுக்கு புளியோதரையுடன் வடையும் பிரசாதமாக தரப்படுகிறது. தினமும் சராசரியாக 400 முதல் 500 பேருக்கு பிரசாதம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சனி, ஞாயிற்றுகிழமைகளில் 1000 பேருக்கு அதிகமாக கோயிலுக்கு வந்து செல்வதால், அன்று அனைவருக்கும் பிரசாதம் கிடைக்கும் வகையில் கூடுதலாக தயார் செய்யப்படும் என கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: