×

கேப்டன் பிஞ்ச் பொறுப்பான ஆட்டம்; அயர்லாந்துக்கு எதிராக ஆஸி. அபார வெற்றி: டக்கர் போராட்டம் வீண்

பிரிஸ்பேன்: ஐசிசி உலக கோப்பை டி20 தொடரின் சூப்பர்-12 சுற்று முதல் பிரிவு லீக் ஆட்டத்தில், ஆஸ்திரேலியா 42 ரன் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்தது. காபா மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. வார்னர், பிஞ்ச் இருவரும் ஆஸ்திரேலிய இன்னிங்சை தொடங்கினர். வார்னர் 3 ரன் எடுத்து மெக்கார்தி வேகத்தில் மார்க் அடேர் வசம் பிடிபட்டார். அடுத்து பிஞ்ச் - மிட்செல் மார்ஷ் இணைந்து 2வது விக்கெட்டுக்கு 52 ரன் சேர்த்தனர். மார்ஷ் 28, மேக்ஸ்வெல் 13 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும், பொறுப்புடன் விளையாடிய பிஞ்ச் 38 பந்தில் அரை சதம் அடித்தார். பிஞ்ச் - ஸ்டாய்னிஸ் ஜோடி 4வது விக்கெட்டுக்கு 70 ரன் சேர்த்தது. பிஞ்ச் 63 ரன் (44 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி மெக்கார்தி பந்துவீச்சில் அடேர் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஸ்டாய்னிஸ் 35 ரன் (25 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி ஜோஷ் லிட்டில் வேகத்தில் டாக்ரெல் வசம் பிடிபட்டார்.

ஆஸ்திரேலியா 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 179 ரன் குவித்தது. டிம் டேவிட் 15 ரன், மேத்யூ வேடு 7 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். அயர்லாந்து பந்துவீச்சில் மெக்கார்தி 4 ஓவரில் 29 ரன்னுக்கு 3 விக்கெட் கைப்பற்றினார். லிட்டில் 4 ஓவரில் 21 ரன் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 180 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணி, 4 ஓவரில் 25 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து தடுமாறியது. கேப்டன் பால்பிர்னி 6, பால் ஸ்டர்லிங் 11 ரன்னில் வெளியேற, டெக்டர் 6 ரன் எடுத்து மேக்ஸ்வெல் சுழலில் பலியானார். கர்டிஸ் கேம்பர், ஜார்ஜ் டாக்ரெல் இருவரும் ஸ்டார்க் வேகத்தில் டக் அவுட்டானது அயர்லாந்துக்கு பெரும் பின்னடைவை கொடுத்தது.

ஒரு முனையில் லார்கன் டக்கர் உறுதியுடன் போராட... கேரத் டெலானி 14, மார்க் அடேர் 11, ஹேண்ட் 6, மெக்கார்தி 3, ஜோஷ் லிட்டில் 1 ரன் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். அயர்லாந்து அணி 18.1 ஓவரில் 137 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. டக்கர் 71 ரன்னுடன் (48 பந்து, 9 பவுண்டரி, 1 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆஸி. பந்துவீச்சில் கம்மின்ஸ், மேக்ஸ்வெல், ஸ்டார்க், ஆடம் ஸம்பா தலா 2 விக்கெட், ஸ்டாய்னிஸ் 1 விக்கெட் வீழ்த்தினர். பிஞ்ச் ஆட்ட நாயகன் விருது பெற்றார். ஆஸி. அணி 4 போட்டியில் 5 புள்ளிகள் பெற்று (2 வெற்றி, 1 தோல்வி, 1 ரத்து) முதல் பிரிவில் 2வது இடத்துக்கு முன்னேறியதுடன் அரையிறுதி வாய்ப்பையும் தக்கவைத்துள்ளது.


Tags : Finch ,Aussies ,Ireland ,Tucker , Captain Finch played in charge; Aussies vs Ireland Huge victory: Tucker's struggle was futile
× RELATED ஸ்காட்லாந்தை வீழ்த்திய ஆஸி