தேவர் ஜெயந்தியை முன்னிட்டு கொடிக்கம்பம் நட முயன்ற மாணவன் மின்சாரம் தாக்கி பலி; கடையம் அருகே சோகம்

கடையம்: கடையம் அருகே தேவர் ஜெயந்தியை முன்னிட்டு கொடிக்கம்பம் நட முயன்ற கல்லூரி மாணவன் மின்சாரம் தாக்கி பலியானார். தென்காசி மாவட்டம், கடையம் அருகே கோவிந்தபேரியை சேர்ந்தவர் சுப்பிரமணியன், கூலி வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி இசக்கியம்மாள். இவர்களது மூத்த மகன்   முத்துக்குமார், அம்பை கலைக்கல்லூரியில் பி.ஏ ஆங்கிலம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கோவிந்தபேரி கிராமத்தில் தேவர் ஜெயந்தி விழாவுக்காக நேற்று முன்தினம் இரவு முத்துக்குமார் மற்றும் இளைஞர்கள் அங்குள்ள முப்புடாதியம்மன் கோயில் முன்பு கொடிக் கம்பம் நட முயன்றுள்ளனர்.

அப்போது மேலே சென்ற உயர் அழுத்த மின் கம்பியுடன் கொடி கம்பி உரசியதில் முத்துக்குமார் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், முத்துக்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஆழ்வார்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மற்ற இரு வாலிபர்கள் செருப்பு அணிந்ததால் காயத்துடன் உயிர் பிழைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: