கோவை கார் வெடிப்பு விவகாரம்; கைதான 5 பேரிடம் காவல் விசாரணையில் திடுக் தகவல்கள்: மீண்டும் சிறையில் அடைப்பு

கோவை: கோவை கார் வெடிப்பு வழக்கில் கைதானவர்களை போலீசார் காவலில் எடுத்து நடத்திய விசாரணையில், திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. கோவை கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோயில் முன்பு கடந்த 23ம் தேதி கார் வெடித்து ஜமேசா முபின் (29) என்பவர் பலியானார். இது தொடர்பாக உக்கடம் போலீசார் வழக்குப்பதிந்து, முபினின் கூட்டாளிகள் உக்கடம் ஜி.எம் நகரை சேர்ந்த முகமது தல்கர் (25), முகமது அசாருதீன் (25), முகமது ரியாஸ் (27), பெரோஸ் இஸ்மாயில் (28), முகமது நவாஸ் இஸ்மாயில் (26) ஆகிய 5 பேரை சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம் (உபா) பிரிவில் கைது செய்தனர்.

தொடர்ந்து 6வதாக உக்கடம் வின்சென்ட் ரோட்டை சேர்ந்த அப்சர்கான் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். ஏற்கனவே கைது செய்யப்பட்ட 5 பேரையும் கடந்த 26ம் தேதி முதல் தனிப்படை போலீசார் 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். இதற்கிடையே இந்த வழக்கு விசாரணை என்ஐஏவுக்கு மாற்றப்பட்டது. 5 பேரின் காவல் விசாரணை நேற்று முன்தினம் முடிந்ததை தொடர்ந்து போலீசார் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி மீண்டும் கோவை மத்திய சிறையில் அடைத்தனர். 5 பேரிடமும் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதன்விவரம் வருமாறு: கோவை கார் விபத்தில் பலியான ஜமேசா முபின் 2011 முதல் 2015 வரை கோவை கருமத்தம்பட்டி அடுத்த கனியூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் பிஇ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து முடித்துள்ளார். அதன் பின்னர் சிறு, சிறு வியாபாரங்கள் செய்து வந்துள்ளார். இவரது கல்லூரி தோழராக இருந்தவர் கோவை உக்கடத்தை சேர்ந்த முகமது அசாருதீன். இவர் இலங்கை தேவாலய குண்டு வெடிப்பில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்டு கேரள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஜமேசா முபின், உறவினர் அப்சர்கான் உள்ளிட்டவர்கள் அடிக்கடி சிறையில் முகமது அசாருதீனை சந்தித்து சதி திட்டம் தொடர்பாக ஆலோசனை நடத்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்பின்னர்தான் ஜமேசா முபின் ஆன்லைன் மூலம் வெடிபொருட்களை வாங்கி தனியாக வீடு எடுத்து அதில் குவித்து வைத்துள்ளார். அதற்கு கைதான கூட்டாளிகள் 5 பேரும் உடந்தையாக இருந்துள்ளனர். அப்போது அவர்கள் காந்திபார்க்கில் 2 எல்பிஜி சிலிண்டர் வாங்கியுள்ளனர். மேலும் உக்கடம் லாரிப்பேட்டை பழைய மார்க்கெட்டில் காலி இரும்பு டிரம்கள் வாங்கி அதில் வெடிபொருட்களை சேகரித்துள்ளனர்.

சம்பவம் நடைபெறுவதற்கு முன்பு காரில் சிலிண்டர் மற்றும் வெடிபொருட்களை ஏற்றி ஜமேசா முபின் சங்கமேஸ்வரர் கோயில் நோக்கி புறப்பட்டார். அந்த கோயில் அவரது வீட்டில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. ஆனால், அதற்கு முன்பாகவே ஜமேசா முபின் கார் வெடித்து உடல் கருகி பலியானார். இதற்கிடையே இந்த தாக்குதல் சம்பவம் ஒற்றை ஓநாய் தாக்குதலைபோல் உள்ளதாக தகவல்கள் பரவியது. இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், இது ஒற்றை ஓநாய் தாக்குதல் கிடையாது என மறுத்துள்ளார்.

கடையடைப்பு ஒத்தி வைப்பு: கோவை மாவட்ட பாஜ தலைவர் பாலாஜி உத்தமராமசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், கார் வெடிப்பு சம்பவத்தைக் கண்டித்து, 31ம் தேதி (நாளை) முழு கடையடைப்பு போராட்டம் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தற்போது என்ஐஏ விசாரணை முழு வீச்சில் துவங்கியுள்ள நிலையில்,

கோவை மாநகர வியாபாரிகள், தொழிலதிபர்கள் பாஜ மாநிலத் தலைவர் அண்ணாமலையைத் தொடர்பு கொண்டு, மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொண்டனர்.

இதைத்தொடர்ந்து அவர், பாஜ தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன், கோவை தெற்கு எம்எல்ஏ வானதி சீனிவாசன், பாஜ பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் ஆகியோரிடம் மாநகர மக்களுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தினார். அதை ஏற்று, 31ம் தேதி கடையடைப்பு போராட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

விசாரணை ஆவணங்கள் என்ஐஏயிடம் ஒப்படைப்பு

கோவை கார் வெடிப்பு வழக்கை முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிந்துரையின்பேரில் ஒன்றிய உள்துறை செயலகம் என்ஐஏ விசாரணைக்கு உத்தரவிட்டது. இதையடுத்து என்ஐஏ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடந்த 23ம் தேதி முதல் தற்போது வரை கோவை மாநகர போலீசார் விசாரித்து வந்த இந்த வழக்கின் முழு விபரம் அடங்கிய ஆவணங்களை போலீசார் நேற்று என்ஐஏ அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். என்ஐஏ டிஐஜி வந்தனா தலைமையிலான அதிகாரிகள் வழக்கு விசாரணையை துவக்க உள்ளனர்.

தனிப்படைபோலீசாரின் விசாரணை நிறைவு

கோவை கார் வெடிப்பு விசாரணையில் என்ஐஏ தீவிரமாக களம் இறங்கிவிட்டதால், கோவை போலீசார் கடந்த 7 நாட்களாக நடத்திய விசாரணையை நேற்று மாலையுடன் முடித்துக்கொண்டனர். இது குறித்து கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறுகையில், ‘‘இதுவரை நாங்கள் மேற்கொண்ட விசாரணை அறிக்கை, கைப்பற்றிய பொருட்கள் உள்ளிட்ட அனைத்தையும் என்ஐஏவிடம் ஒப்படைத்து விட்டோம்’’ என்றார். என்ஐஏ தலைமை விசாரணை அதிகாரியாக இன்ஸ்பெக்டர் விக்னேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், ஓரிரு தினங்களில் கோவைக்கு வந்து விசாரணையை துவக்க உள்ளார்.

Related Stories: