×

கிராம சபை கூட்டம் நடைபெறுவது போன்று தமிழகத்தில் முதன்முறையாக நவ.1ம் தேதி பேரூராட்சி, நகராட்சி, மாநகர சபை கூட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பம்மலில் மக்கள் குறை கேட்கிறார்

சென்னை: தமிழகத்தில் தற்போது கிராம சபை கூட்டம் நடைபெறுவது போன்று, முதன்முறையாக தமிழகத்தில் பேரூராட்சி சபை, நகர சபை, மாநகர சபை கூட்டம் நடக்கிறது. நவம்பர் 1ம் தேதி சென்னை, பம்மல் அருகே நடைபெறும் மாநகர சபை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக பங்கேற்று பொதுமக்களின் குறைகளை கேட்கிறார். தமிழகத்தில் தற்போது குடியரசு நாள் (ஜனவரி 26ம் தேதி), தொழிலாளர் நாள் (மே 1ம் தேதி), சுதந்திர தினம் (ஆகஸ்ட் 15), காந்தி ஜெயந்தி (அக்டோபர் 2), உலக நீர் நாள் (மார்ச் (22), உள்ளாட்சி நாள் (நவம்பர் 1) என ஆண்டுக்கு 6 முறை கிராம சபை கூட்டம் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, வருகிற நவம்பர் 1ம் தேதி அனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டம் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு கிராமங்களிலும் அன்றைய தினம் நடைபெறும் கூட்டத்தில், பொதுமக்கள் தங்கள் குறைகளை சொல்ல வசதி ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. இதை பின்பற்றி தமிழகத்தில், முதல்முறையாக நகரசபை மற்றும் மாநகர சபை கூட்டம் நடக்கிறது. கிராம சபை கூட்டங்களை போல நகர சபை, மாநகர சபை கூட்டம் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டு நேற்று அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு வார்டிலும் இந்த கூட்டம் நடக்கிறது.

இதுகுறித்து தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் சிவ்தாஸ் மீனா நேற்று வெளியிட்டுள்ள அரசாணையில், “நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் வார்டு கமிட்டி மற்றும் ஏரியா சபை அமைப்பதற்கான விதிகளை கடந்த ஜூலை மாதம் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள ஒவ்வொரு வார்டுக்கும் வார்டு கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சிகளில் 5 லட்சம் வரை மக்கள் தொகை உள்ள வார்டுகளில் 4 முதல் 5 ஏரியா சபைகளும், 5 முதல் 10 லட்சம் வரை உள்ள மக்கள் தொகை உள்ள வார்டுகளில் 6 முதல் 9 ஏரியா சபைகளும், 10 லட்சத்திற்கு மேல் மக்கள் தொகை உள்ள வார்டுகளில் 10 ஏரியா சபைகளும், நகராட்சிகளில் ஒரு வார்டில் 4 நகர சபை கூட்டமும், பேரூராட்சிகளில் ஒரு வார்டில் 3 சபை கூட்டமும் வருகிற நவம்பர் 1ம் தேதி நடைபெறும்” என்று கூறப்பட்டுள்ளது.

அதன்படி, தமிழகத்தில் கிராம சபை கூட்டம் நடைபெறுவது போன்று முதன்முறையாக பேரூராட்சி சபை, நகர சபை, மாநகர சபை  கூட்டம் நடைபெற இருக்கிறது. சென்னை புறநகர் பகுதியான தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்லாவரம் அருகே உள்ள பம்மல் 6வது வார்டில் நடைபெறும் மாநகரசபை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக பங்கேற்று மக்கள் குறைகளை கேட்க உள்ளார். இந்த இடத்தை நேற்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் மாவட்ட கலெக்டர், அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு சென்றுள்ளனர்.

தற்போது நகராட்சி மற்றும் மாநகராட்சி சார்பில் ஒவ்வொரு வார்டுக்கும் உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களில் ஒருவர் நகராட்சி தலைவராக, மாநகராட்சி மேயராக இருந்து வருகிறார்கள். குறிப்பாக கிராம சபை கூட்டத்தை பொறுத்தவரை அங்கு, நடைபெற்று வரும் பணிகள் மற்றும் அப்பகுதியில் உள்ள பொதுமக்களின் கோரிக்கைகள் குறித்து கிராமசபை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு அரசுக்கு தீர்மானமாக அனுப்பி வைக்கப்படும்.
அதன் அடிப்படையில்தான் நகர பகுதியில் இருக்கும் மக்களுடைய குறைகளை கேட்டு அவர்களுக்கான குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் கிராம சபை கூட்டம் போன்று நகரசபை கூட்டமும் நடைபெற முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் நவம்பர் 1ம் தேதி தமிழகம் முழுவதும் கிராம சபை கூட்டம் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அன்றைய தினமே நகர சபை, மாநகர சபை கூட்டமும் நடக்கிறது.

அன்றைய தினம் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை, பம்மல் பகுதியில் உள்ள வார்டுக்கு நேரடியாக சென்று மாநகர சபை கூட்டத்தில் பங்கேற்று மக்களின் குறைகளை கேட்க திட்டமிட்டுள்ளார். கிராம சபை கூட்டம் நடந்தபோதுகூட முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக அந்த கூட்டங்களில் பங்கேற்று பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மாநகர சபை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நவம்பர் 1ம் தேதி பங்கேற்கிறார்.
அரசின் இந்த அறிவிப்பின்படி, இனி ஆண்டுக்கு 6 முறை பேரூராட்சி, நகர சபை மற்றும் மாநகர சபை கூட்டம் அந்தந்த வார்டு கவுன்சிலர்கள் தலைமையில் நடைபெறும். இந்த கூட்டத்தில், அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்களும் பங்கேற்பார்கள். இனி ஆண்டுக்கு 6 முறை பேரூராட்சி, நகர சபை மற்றும் மாநகர சபை கூட்டம் அந்தந்த வார்டு கவுன்சிலர்கள் தலைமையில் நடைபெறும். இந்த கூட்டத்தில், அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்களும் பங்கேற்பார்கள்.

Tags : Tamil Nadu ,CM ,M.K.Stalin ,Pammal , Village Council, Municipality, City Council meeting held for the first time in Tamil Nadu on November 1: Chief Minister M. K. Stalin asks people's grievances in Pammal
× RELATED வெப்ப அலை வீசும் என வானிலை எச்சரிக்கை...