×

9.95 லட்சம் பட்டதாரிகள் எழுதிய குரூப் 2 தேர்வுக்கு விரைவில் ரிசல்ட்: டிஎன்பிஎஸ்சி செயலாளர் அறிவிப்பு

சென்னை: 9.95 லட்சம் பட்டதாரிகள் எழுதிய குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுக்கான ரிசல்ட் விரைவில் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி செயலாளர் உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார். டிஎன்பிஎஸ்சி குரூப் 2 பதவி (நேர்முக தேர்வு பதவி) 116 இடங்கள், குரூப் 2ஏ(நேர்முகத் தேர்வு அல்லாத பதவி) பதவியில் 5,413 இடங்கள் என மொத்தம் 5,529 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த பிப்ரவரி மாதம் 23ம் தேதி அறிவித்தது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏதாவது பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. இத்தேர்வுக்கு 11 லட்சத்து 78 ஆயிரத்து 175 பேர் விண்ணப்பித்தனர். விண்ணப்பித்தவர்களில் பெண்கள் 6,81,880 பேர், ஆண்கள் 4,96,247 பேர், மூன்றாம் பாலினத்தவர் 48 பேர், 14531 பேர் மாற்றுத்திறனாளிகள் ஆவர்.

இந்த நிலையில்  குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுக்கான முதல்நிலை தேர்வு கடந்த மே மாதம் 21ம் தேதி நடந்தது. மொத்தத்தில் தேர்வை 84.4 சதவீதம் பேர் எழுதினர். அதாவது, 9 லட்சத்து 94 ஆயிரத்து 878 பேர் தேர்வை எழுதினர். 15.56 சதவீதம் பேர் ஆப்சென்ட் ஆகினர். அதாவது 1 லட்சத்து 83 ஆயிரத்து 285 பேர் தேர்வு எழுத வரவில்லை என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்து இருந்தது. தேர்வு நடைபெற்று சுமார் 5 மாதங்கள் ஆகிவிட்டது. ஆனால் தேர்வு முடிவுகள் வெளியிடப்படாமல் இருந்து வந்தது. தேர்வு முடிவு எப்போது வெளியாகும் என்று தேர்வர்கள் ஆர்வத்தில் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் தேர்வு முடிவு எப்போது வெளியிடப்படும் என்பது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது.

இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் பி.உமா மகேஸ்வரி நேற்று வெளியிட்ட அறிவிப்பு: ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான குரூப் 2, 2ஏ தேர்வுக்கான முதல்நிலை தேர்வு கடந்த மே மாதம் 21ம் தேதி நடந்தது. இதற்கிடையே மகளிருக்கான இட ஒதுக்கீட்டினை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக பல்வேறு வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தன. இந்த வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பினை வழங்கிய நிலையில் அதனை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக பல்வேறு கட்ட கலந்தா லோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனைத் தொடர்ந்து உயர்நீதிமன்றத்தின் ஆணைகளை செயல்படுத்துவது தொடர்பாக மென்பொருளில் உரிய மாற்றங்கள் செய்யும் பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது. அப்பணி நிறைவுற்ற பின்னர் இந்த தேர்வின் முடிவுகள் விரைவில் வெளியிடப்படும். இது தொடர்பாக வெளிவரும் ஆதாரமற்ற தகவல்களை நம்ப வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : TNPSC , 9.95 Lakh Graduates Written Group 2 Result Soon: TNPSC Secretary Announces
× RELATED டிஎன்பிஎஸ்சி குரூப் 1 பதவிக்கு 2ம் கட்ட நேர்முக தேர்வு