×

நாமக்கல் மாவட்டத்தில் அதிகரிக்கும் விழிப்புணர்வு குழந்தை திருமணங்களை தடுக்க களமிறங்கும் அதிகாரிகள்-அதிகளவில் வழக்குகளும் பதிவு

நாமக்கல் : நாமக்கல் மாவட்டத்தில் குழந்தை திருமணங்களை கண்காணித்து தடுக்கும் வகையில் பல்வேறு அரசு துறையினரும், தன்னார்வலர்களும் குழுவாக இணைந்து களத்தில் இறங்கி செயல்பட்டு வருகின்றனர். இதன் எதிரொலியாக கடந்த ஓராண்டில் மட்டும் 55 திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரையில் நாமக்கல், சேலம், திண்டுக்கல், தேனி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, கடலூர் மாவட்டங்களில் அதிகளவில் குழந்தை திருமணங்கள் நடப்பதாக சமூகநலன் மற்றும் மகளிர்நலத்துறை ஆய்வுகள் தெரிவித்துள்ளன. இதில் நாமக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை குழந்தை திருமண வழக்குகள் பதிவு செய்வதில் முதலிடத்தில் உள்ளது.

 இதேபோல் இந்த மாவட்டத்தில் குழந்தை திருமணங்களை கண்காணித்து தடுத்து நிறுத்துவதில் அனைத்து துறை அலுவலர்களும் ஒன்றிணைந்து குழுவாக செயல்பட்டு வருகின்றனர். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழு, ஒருங்கிணைப்பு குழு மற்றும் நலக்குழு ஆகியவற்றின் பணிகள் இதில் பிரதானமாக உள்ளது. அதே நேரத்தில் ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் என்று அனைவரும் குழந்தை திருமண தடுப்பு நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

சமீபத்தில் கலெக்டர் ஸ்ரேயாபி.சிங் தலைமையில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் குழந்தை திருமணங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது தலைமை ஆசிரியர்கள், வகுப்பு ஆசிரியர்கள், கிராமநிர்வாக அலுவலர்்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள் என்று அனைவரும் இது போன்ற திருமணங்களை கண்காணித்து வருவது குறித்து பேசினார். இது போன்றவர்களின் ஒத்துழைப்பால் கடந்த 3 மாதத்தில் மட்டும் 12 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும் நடைபெற்ற  திருமணங்கள் தொடர்பாக 20வழக்குகள் சம்மந்தப்பட்டவர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். மாவட்டத்தில் இது போன்ற கூட்டு முயற்சிக்கு நல்லவரவேற்பு மட்டுமன்றி அதிக பலன் கிடைத்து வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் கிடைத்த ரகசிய தகவல்களின் அடிப்படையில் 55 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதில் கடந்த 3மாதங்களில் மட்டும் 12 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும் நடைபெற்ற 110 குழந்தை திருமணங்களில் சம்மந்தப்பட்டவர்கள் மீது குழந்தை திருமண தடை சட்டம் 2006 மற்றும் போக்சோ உள்ளிட்ட சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 18வயது நிறைவடையாத பெண் குழந்தைக்கோ, 21வயது நிறைவடையாத ஆணுக்கோ திருமணம் செய்வது குற்றமாகும். இதை மீறுவோர் மீது குழந்தை திருமண சட்டத்தின் படி 2ஆண்டுகள்வரை சிறை தண்டனையும், ₹1லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து சமூக நலத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘18வயது நிறைவடையாத பெண் குழந்தைக்கு திருமணம் செய்து வைத்து கருவுறும் போது கர்ப்பப்பை உள்ளிட்ட இனப்பெருக்க உறுப்புகள் சரியாக வளர்ச்சி அடையாமல் இருக்கும். இதனால் கருச்சிதைவு ஏற்படுவதோடு மாற்றுத்திறன் குழந்தைகள் பெறுவதற்கும் வழிவகுக்கும். அதோடு மனவளர்ச்சி குன்றிய நிலையிலும் குழந்தை பிறக்க வாய்ப்புள்ளது. அதோடு பிரசவிக்கும் பெண் குழந்தைக்கு உயிரிழப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது.

இது போன்ற அவலங்களையும், அபாயங்களையும் எடுத்துரைத்து அனைத்து பகுதிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். எங்களின் முயற்சிகளுக்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு நல்க வேண்டும். தங்கள் பகுதியில் குழந்தை திருமணங்கள் நடந்தால் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரை 04286-233103 என்ற எண்ணிலும், 1098 என்ற சைல்டு எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் கொடுப்போரின் ரகசியம் பாதுகாக்கப்படும்,’’ என்றனர்.

Tags : Namakkal , Namakkal: Various government departments and volunteers are working to monitor and prevent child marriages in Namakkal district.
× RELATED நாமக்கல் கோர்ட்டில் யுவராஜ் நேரில் ஆஜர்