×

கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி மாநில எல்லைகளில் தீவிர சோதனை

உடுமலை : கேரள மாநிலத்தில் ஒரு சில பகுதிகளில் பறவை காய்ச்சல் மீண்டும் பரவி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக- கேரள எல்லையில் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.கேரளமாநிலம் கோழிக்கோடு  மாவட்டத்தில் கோழிப்பண்ணைகளில் வளர்த்து வந்த கோழிகள் திடீரென இறந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த கேரள கால்நடைத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதில் கோழிகள் பறவை காய்ச்சலால் உயிரிழந்தது தெரிய வந்தது. இதையடுத்து கேரள மாநிலத்தில் பறவை காய்ச்சல் பரவுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தமிழக அரசு மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் பறவை காய்ச்சல் தமிழகத்தில் பரவுவதை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இதன்படி மாநில எல்லையில் உள்ள சோதனைச்சாவடிகளில் மருத்துவக்குழுக்களை நியமித்து 3 ஷிப்டுகளாக பணிபுரிய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி ஒரு மருத்துவ உதவியாளர், இரு ஆய்வாளர் மற்றும் மருந்தடிப்பவர் என ஒரு குழுவிற்கு 5 பேர் என தினமும் காலை 10 மணி முதல் 2 மணி வரை ஒரு குழுவும், 2 மணி முதல் இரவு 10 மணி வரை ஒரு குழுவும் இரவு 10 மணி முதல் மற்றொரு குழுவும் பணியில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து கேரள மாநிலம் மூணார் செல்லும் மலைவழிப்பாதையில் அமைந்துள்ள 9/6 செக்போஸ்ட் பகுதியில் மருத்துவக்குழுவினர் தங்கியிருந்து கேரளாவில் இருந்து தமிழகம் வரும் அனைத்து வாகனங்களுக்கும் மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதே போல கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு முட்டை,கறிக்கோழி போன்றவற்றை கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த பணியானது இரவு,பகலாக தொடர்கிறது. கேரளாவில் பரவி வரும் பறவை காய்ச்சலால் மாநில எல்லையோர மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

Tags : Kerala , Udumalai : Alert due to resurgence of bird flu in some parts of Kerala state
× RELATED ஜூன் 3ல் பாபா ராம்தேவ் ஆஜராக கேரள நீதிமன்றம் ஆணை