×

மகள் பிரசவ செலவுக்கு கொண்டு சென்றபோது சாலையில் முதியவர் தவற விட்ட பணத்தை ஒப்படைத்த இருவருக்கு ஏஎஸ்பி பாராட்டு

சத்தியமங்கலம் : சத்தி அருகே மகள் பிரசவ செலவுக்கு கடன் வாங்கிய பணத்தை சாலையில் முதியவர் தவற விட்ட நிலையில் அதனை கண்டெடுத்து ஒப்படைத்த இருவருக்கு சத்தியமங்கலம் ஏஎஸ்பி ஐமன் ஜமால்  சால்வை அணிவித்து  பாராட்டினார்.ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் இலங்கை தமிழர் முகாமை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (55). இவர் நேற்றுமுன்தினம் சித்தோடு செல்வதற்காக சத்தியமங்கலம் பேருந்து நிலையத்துக்கு வந்து கொண்டிருந்தபோது பேருந்து நிலையம் அருகே சாலையில் 500 ரூபாய் நோட்டுகள் கொண்ட 40 ஆயிரம் ரூபாய் கிடந்ததை கண்டார்.

அப்போது அவருக்கு பின்னால் வந்து கொண்டிருந்த பவானிசாகர் தொட்டம் பாளையத்தை சேர்ந்த ஷோரூம் ஊழியர் கோகுல் (21) என்பவர் இந்த பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைக்கலாம் என கூறியதையடுத்து இருவரும்  சேர்ந்து  சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் பணத்தை ஒப்படைத்தனர். இதையடுத்து பணத்தை தவற விட்டவர்கள் உரிய ஆவணங்களை காட்டி அதனை பெற்று செல்லலாம் என போலீசார் வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் பதிவிட்டனர். இந்நிலையில் சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்த குணசிங்கம் என்பவர் காவல் துறையினரை தொடர்பு கொண்டு கண்டெடுக்கப்பட்ட பணம் தனது நண்பருடையது என தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, போலீசார் விசாரணையில், அதே பகுதியில் பெட்டி கடை நடத்தி வரும் ஜோஸ்வா (61) என்பவர் கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது மகளின் பிரசவ செலவுக்காக நண்பர் குணசிங்கத்திடம் கடனாக 40 ஆயிரம் ரூபாய் பணம் பெற்றதும், பின்னர் கோவை மருத்துவமனைக்கு செல்வதற்காக சத்தியமங்கலம் பேருந்து நிலையம் செல்லும் வழியில் பணத்தை தவற விட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து பணத்தை தவற விட்ட ஜோஸ்வாவிடம் பணத்தை ஒப்படைத்த சத்தியமங்கலம் உதவி காவல் கண்காணிப்பாளர் ஐமன் ஜமால், நேர்மையான முறையில் காவல்துறையிடம் ஒப்படைத்த ராஜேஸ்வரி, வாலிபர் கோகுல் ஆகிய இருவரையும் பாராட்டி சால்வை அணிவித்தார். இதற்கிடையில், சாலையில் கிடந்த பணத்தை காவல்துறையிடம் இருவர் ஒப்படைத்த சம்பவம் சத்தியமங்கலம் பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags : ASP , Sathyamangalam: An old man found the money he had borrowed for his daughter's delivery near Satthi on the road.
× RELATED மணிப்பூரில் ஏஎஸ்பி கடத்தல் ஆயுத படையினர் போராட்டம்