×

மெரினா கடற்கரை மணலில் ஜெர்மனியின் அதிநவீன கை துப்பாக்கி சிக்கியது: மர்ம நபருக்கு போலீசார் வலை வீச்சு

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் வழக்கம்போல் நேற்று முன்தினம் காலை பொதுமக்கள் பலர் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நொச்சிக்குப்பத்தை சேர்ந்த சுரேஷ் என்பவர் நடைபயிற்சியில் இருந்தபோது, கலங்கரை விளக்கம் அருகே மணல் பரப்பில் துப்பாக்கி கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனே சுரேஷ் மணலில் கிடந்த துப்பாக்கியை எடுத்து, அப்போது அருகில் உயிர் காக்கும் பிரிவில் பணியில் இருந்து கடலோர பாதுகாப்பு குழுமம் முதல் நிலை காவலர் ஆரோக்கியராஜ் என்பவரிடம் கொடுத்தார். அதை அவர், கடலோர பாதுகாப்பு குழும இன்ஸ்பெக்டர் நீலாதேவியிடம் ஒப்படைத்தார். அதை மெரினா போலீசாரிடம் விசாரணைக்காக அளித்தார். துப்பாக்கியை பெற்றுக் கொண்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், ஜெர்மன் நாட்டில் தயாரிக்கப்பட்ட அதிநவீன தொழில் நுட்பம் கொண்ட துப்பாக்கி என தெரியவந்துள்ளது. இருந்தாலும், கடற்கரை மணலில் மூடி இருந்ததால் தற்போது பயன்படுத்த முடியாது. துப்பாக்கியில் தோட்டாக்கள் எதுவும் இல்லை என்று போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து மெரினா போலீசார் குற்றவியல் விசாரணை நடைமுறை சட்டம் பிரிவு 102 ன் கீழ் வழக்கு பதிவு செய்து, மீட்கப்பட்ட துப்பாக்கி குறித்தும், துப்பாக்கியின் உரிமையாளர் யார் அல்லது மர்ம நபர் யார் என்பது குறித்தும் மெரினா கடற்கரை பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை பெற்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்லும் மெரினா கடற்கரை மணலில் துப்பாக்கி மீட்கப்பட்ட சம்பவம் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Germany ,Marina beach , German Sophisticated Handgun Found In Marina Beach Sand: Cops Net For Mysterious Person
× RELATED சில்லி பாய்ன்ட்…