×

மழையால் ஆட்டம் பாதிப்பு டி/எல் விதியால் அயர்லாந்து வெற்றி: இங்கிலாந்துக்கு அதிர்ச்சி

மெல்போர்ன்: உலக கோப்பை டி20 முதல் சுற்று லீக் ஆட்டத்தில், அயர்லாந்து அணியிடம் இங்கிலாந்து டி/எல் விதிப்படி 5 ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது. எம்சிஜி மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச... அயர்லாந்து அணி 19.2 ஓவரில் 157 ரன் குவித்து ஆல் அவுட்டானது. தொடக்க வீரர் கேப்டன் பால்பிர்னி அதிரடியாக 62 ரன் (47 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினார். லார்கன் டக்கர் 34 ரன், கேம்பர் 18, பால் ஸ்டர்லிங் 14, கேரத் டெலானி 12* ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இங்கிலாந்து தரப்பில் மார்க் வுட், லிவிங்ஸ்டன் தலா 3, சாம் கரன் 2, ஸ்டோக்ஸ் 1 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து 14.3 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 105 ரன் எடுத்திருந்தபோது, கனமழை கொட்டியதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. கேப்டன் பட்லர் 0, ஹேல்ஸ் 7, மலான் 35, ஸ்டோக்ஸ் 6, புரூக் 18 ரன்னில் பெவிலியன் திரும்பினர். மொயீன் அலி 24 ரன் (12 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்), லிவிங்ஸ்டன் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். மேற்கொண்டு ஆட்டம் நடைபெற வாய்ப்பு இல்லாத நிலையில், டி/எல் விதிப்படி அயர்லாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றதாக அறிவிகப்பட்டது. டி/எல் கணக்கீட்டின்படி 14.3 ஓவரில் இங்கிலாந்து 111 ரன் எடுத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. எதிர்பாராத இந்த முடிவால், இங்கிலாந்து அணி அதிர்ச்சியில் உறைந்தது. பால்பிர்னி ஆட்ட நாயகன் விருது பெற்றார். அயர்லாந்து 2 புள்ளிகளை தட்டிச் சென்றது.

* நியூசி. - ஆப்கான் ஆட்டம் ரத்து
மெல்போர்னில் நேற்று நடைபெற இருந்த மற்றொரு முதல் பிரிவு லீக் ஆட்டத்தில், நியூசிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் மோத இருந்தன. இந்த போட்டி கனமழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் கைவிடப்பட்டது. இதையடுத்து இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டது. நடப்பு உலக கோப்பை தொடரின் மிக முக்கியமான சூப்பர் 12 சுற்று லீக் ஆட்டங்கள் அடுத்தடுத்து மழையால் பாதிக்கப்பட்டு வருவது ரசிகர்களை மிகுந்த ஏமாற்றம் அடைய வைத்துள்ளது.Tags : Ireland ,England , Ireland win due to rain-affected D/L rule: Shock for England
× RELATED ஹாட்ரிக் வெற்றி யாருக்கு? இந்தியா –...