×

கோயம்பேடு மார்க்கெட்டில் வரத்து குறைவால் பீன்ஸ், பீட்ரூட் உட்பட காய்கறி விலை உயர்வு: தக்காளி விலை குறைந்தது

சென்னை: கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரத்து குறைந்ததால் பீன்ஸ், பீட்ரூட் உள்பட பல காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. தக்காளி விலை மட்டும் குறைந்துள்ளது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு  தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகள் கொண்டு வரப்படுகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை என்பதால் சில்லரை வியாபாரிகள் பெரும்பாலானோர் சொந்த ஊருக்கு சென்றுவிட்டனர். மேலும், மார்க்கெட்டுக்கு 25ம் தேதி ஒருநாள் விடுமுறை என்பதாலும் காய்கறிகள் வாங்க சில்லரை வியாபாரிகள் மற்றும் இல்லத்தரசிகள் வராததால் கோயம்பேடு மார்க்கெட் வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் ஏற்கனவே வந்த காய்கறிகள் வியாபாரம் இல்லாமல் தேக்கத்தில் போடப்பட்டது.

இந்நிலையில், நேற்று காலை காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்தது. ஒரு கிலோ சின்ன வெங்காயம் 120க்கும் ஊட்டி கேரட் 120க்கும் பெங்களூரு கேரட் 60க்கும் பீன்ஸ் 90க்கும் பீட்ரூட் 45க்கும் முருங்கைக்காய் 70க்கும் வெண்டைக்காய் 25க்கும் சவ்சவ் 30க்கும் முள்ளங்கி 20க்கும் இஞ்சி 75க்கும் பூண்டு 120க்கும் பீர்க்கங்காய் 40க்கும் எலுமிச்சை 70க்கும் நூக்கல் 40க்கும் பச்சை மிளகாய் 50 என விற்பனையானது. இதுகுறித்து, காய்கறி சிறுமொத்த வியாபாரிகள் சங்க தலைவர் முத்துகுமார் கூறும்போது, ‘வரத்து குறைவால் அனைத்து காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. தினசரி 7000 டன் காய்கறிகள் தேவைப்படுகிறது. ஆனால் நேற்று காலை 4000 டன் காய்கறிகள் வந்துள்ளன. குறிப்பாக நாட்டு தக்காளி 50லிருந்து 25க்கும் நவீன் தக்காளி 60லிருந்து 30க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. முகூர்த்த நாள் நெருங்கி வருவதால் மீண்டும் காய்கறிகளின் விலை அதிகரிக்கும்’ என்றார்.

Tags : Koyambedu , In Koyambedu market vegetable prices including beans, beetroot rise due to lack of supply: Tomato prices fall
× RELATED கோயம்பேடு பூ மார்க்கெட் வருகின்ற 19ம்...