×

ரிஷி சுனக் அமைச்சரவையில் மற்றொரு இந்திய வம்சாவளிக்கு வாய்ப்பு: ராஜினாமா செய்தவருக்கு பதவி கொடுத்ததால் சலசலப்பு

லண்டன்: இங்கிலாந்து பிரதமராக பதவியேற்ற ரிஷி சுனக், தனது அமைச்சரவையில் மற்றொரு இந்திய வம்சாவளிக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார். இதனால் புதிய சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்தின் புதிய பிரதமராக ரிஷி சுனக் நேற்று பதவியேற்றார். இந்திய வம்சாவளியான அவரை, இந்திய தலைவர்கள் மட்டுமின்றி ஆசிய நாடுகளின் தலைவர்களும், ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பிரதமராக பதவியேற்றப் பின்னர் முதன் முறையாக வௌிநாட்டு தலைவர்கள் வரிசையில் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியிடம் ரிஷி சுனக் போனில் பேசினார்.

இதுதொடர்பாக ரிஷி சுனக்கின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘உக்ரைன் பிரதமர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியிடம், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் போனில் பேசினார். இங்கிலாந்து அரசின் ஆதரவு உக்ரைனுக்கு எப்போதும் போல் வலுவாக இருக்கும் என்று கூறினார். அதற்கு பதிலளித்த உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, தனது அரசாங்கம் இங்கிலாந்துடன் இணைந்து செயல்படும் என்று உறுதியளித்தார்’ என்று கூறினார். உக்ரைன் - ரஷ்யா இடையிலான போரில் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பிரதமர் ரிஷி சுனக்கின் அமைச்சரவை பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது.

அதில் முன்னாள் பிரதமர்கள் போரிஸ் ஜான்சன், லிஸ் ட்ரஸ் ஆகியோரின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த பலருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக கருவூலத் தலைவர், வெளியுறவுச் செயலர், பாதுகாப்புச் செயலர், உள்துறை அமைச்சராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுயெல்லா பிரேவர்மேன் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் சுயெல்லா பிரேவர்மேன், கடந்த ஆறு நாட்களுக்கு முன்புதான், தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இவர் அப்போதைய பிரதமர் லிஸ் ட்ரஸ் அரசின் செயல்பாடுகள் குறித்து கவலையை தெரிவித்து வெளியேறினார். இந்த நிலையில் சுயெல்லா பிரேவர்மேன் உள்ளிட்டோர் அமைச்சர்களாக அறிவிக்கப்பட்டது புதிய சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Rishi Sunak , Chance for another Indian-origin in Rishi Sunak cabinet: Uproar over resignation
× RELATED டெல்லி அலுவலகத்தில் நேரில் ஆஜரான...