×

தனித்துவம் கிடைக்க அரசு நடவடிக்கை புவிசார் குறியீடு பெறும் கொல்லிமலை மிளகு-சிறப்பும், விற்பனையும் மேம்பட வாய்ப்பு

சேந்தமங்கலம் : கொல்லிமலை மிளகுக்கு புவிசார் குறியீடு பெறுவதற்கான ஆயத்த பணிகள் துரித கதியில் நடந்து வருகிறது. இதனால் அதன் சிறப்பும், விற்பனையும் அடுத்த கட்டத்திற்கு செல்லும் என்று மலைவாழ் விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். வரலாற்று சிறப்பு மிக்க தமிழகத்தில், ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு தனித்துவம் உள்ளது. இதில் அந்த பகுதிகளை அடையாளப்படுத்தும் பொருட்கள், பெரும் கவனம் ஈர்த்து நிற்கிறது. இந்த வகையில், திருநெல்வேலி அல்வா, திண்டுக்கல் பூட்டு, காஞ்சிபுரம் பட்டு, மதுரை மல்லி, மணப்பாறை முறுக்கு என்று உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இந்த வகையில், மூலிகை வாசம் கமகமக்கும் கொல்லிமலையில் பிரதானமாக இருப்பது மிளகு சாகுபடி.

நாமக்கல் மாவட்டத்தின் முக்கிய மலைபிரதேசமாக இருக்கும் கொல்லிமலை, கடல் மட்டத்திலிருந்து 4,663 அடி உயரத்தில் அமைந்துள்ளது. 280 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை கொண்ட கொல்லிமலையில், 14கிராம ஊராட்சிகள் உள்ளன. இதில் வாழவந்திநாடு, தின்னூர்நாடு, எடப்புளிநாடு, வயல்நாடு, தேவனூர்நாடு உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் மிளகு அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது.

கொல்லிமலையில் 10ஆயிரம் ஏக்கரில் மிளகு சாகுபடி நடக்கிறது. சில்வர்ஓக் மரங்களில் ஊடுபயிராக மிளகு பயிரிடப்படுகிறது. பன்னியூர்-1,கரிமுண்டா, பன்னியூர்-5 மிளகு ரகங்களை இங்குள்ள மலைவாழ் மக்கள் அதிகளவில் தேர்வு செய்து பயிரிடுகின்றனர். அதோடு கொல்லிமலையில் நிலவும் மிதமான தட்பவெப்பநிலையும், ஈரப்பதமும் மிளகு வளர்ச்சிக்கு பெரும்துணையாக நிற்கிறது. இதனால் பிற பகுதிகளை விட, இங்கு பயிரிடப்படும் மிளகு, தரத்தில் முதலிடம் பிடித்து கவனம் ஈர்க்கிறது.

இப்படி தரம் மிக்க கொல்லிமலை மிளகு விற்பனையை, அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன்படச் செய்யவேண்டும். இதற்காக கொல்லி மலை மிளகுக்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என்று மலைவாழ் மக்களும் விவசாயிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். தற்போது தமிழக அரசு இதற்கான ஆயத்த பணிகளில் துரிதம் காட்டி வருகிறது. இது கொல்லிமலை மக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து கொல்லிமலை பழங்குடி மக்கள் மேம்பாட்டு அமைப்பின் நிர்வாகிகள் கூறியதாவது:வல்வில்ஒரி மன்னர் ஆண்ட கொல்லிமலை குறித்தும், அதில் பயிரிடப்படும் மிளகு குறித்தும், சங்க இலக்கிய பாடல்களில் கூட குறிப்புகள் இடம் பெற்றுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இங்கு பயிரிடப்படும் மிளகு சாகுபடி பரப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போதைய நிலவரப்படி, ஆண்டுக்கு ஆயிரம் டன் அளவில் மிளகு உற்பத்தி நடக்கிறது.

குறைந்த பட்சம் ஆண்டுக்கு ₹500 கோடி அளவில் விற்பனை நடக்கிறது. எத்தனயோ பகுதிகளில் மிளகு பயிரிட்டாலும், கொல்லிமலை மிளகுக்கு என பல்லாண்டுகளாக தனிமவுசு உள்ளது. இன்றளவும் அதற்கான வரவேற்பு தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இப்படி தனித்துவம் வாய்ந்த கொல்லிமலை மிளகுக்கு, புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என்று பல்லாண்டுகளாக, ஒன்றிய அரசை வலியுறுத்தி வருகிறோம். இதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சிக்குரியது. புவிசார் குறியீடு கிடைப்பதால், நாங்கள் பயிரிடும் மிளகுக்கு சட்டப்பூர்வ பாதுகாப்பு கிடைக்கும். இதனை மற்றவர்கள் தவறாக விற்பது தடுக்கப்படும். ஏற்றுமதி அதிகரித்து, சர்வதேச வர்த்தகத்தில் சட்ட பாதுகாப்பு கிடைக்கும்.
இவ்வாறு நிர்வாகிகள் கூறினர்.

இது குறித்து வேளாண் அதிகாரிகள் கூறுகையில், ‘கொல்லிமலை பகுதியில் 10ஆயிரம் ஏக்கரில் மிளகு சாகுபடி செய்யப்படுகிறது. இந்த மிளகுக்கு புவிசார் குறியீடு பெறுவதற்கான முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இயற்கை முறையில் இங்கு மிளகு பயிரிடப்படுகிறது. இதில் எந்தவித ரசாயனமும் கலக்கப்படவில்லை என்பதற்கான ஒப்புதலை ‘ஆர்கானிக்’ கமிட்டியிடம் சமர்ப்பிக்க வேண்டும். அதற்கான கடிதத்தை பெரும்பாலான விவசாயிகள் சமர்ப்பித்துள்ளனர்.

இன்னும் ஒரு சிலர் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. இவை நிறைவு பெற்றவுடன் அடுத்தடுத்த பணிகள் நடக்கும். நிச்சயம் கொல்லிமலை மிளகுக்கு புவிசார் குறியீடு பெற்று, அதன் சிறப்பை அடுத்தடுத்த கட்டங்களுக்கு கொண்டு செல்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது,’ என்றனர்.

Tags : Senthamangalam: Preparatory work for getting the geographical code for Kollimalai pepper is going on at a fast pace. Thus
× RELATED தமிழ்நாட்டில் கோவை, மதுரை, தேனி...