×

பஹ்ரைனில் மாயமான 2 மீனவர்களை மீட்க வேண்டும்-உறவினர்கள் கலெக்டரிடம் மனு

நாகர்கோவில் : கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி குழு இயக்குனர் டன்ஸ்டன், தெற்காசிய மீனவர் தோழமை பொதுச்செயலாளர் சர்ச்சில், கடியப்பட்டணம் பங்குத்தந்தை பபியான்ஸ் தலைமையில் மாயமான இரண்டு மீனவர்களின் குடும்பத்தினர்கள் மற்றும் உறவினர்கள் குமரி மாவட்ட கலெக்டரை அவரது அலுவலகத்தில் சந்தித்து பஹ்ரைன் நாட்டில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது 9 நாட்களாக மாயமாகியுள்ள தங்களது மீனவர்களை ஈரான் கடல் பகுதியில் தேடி மீட்டுத் தருமாறு கோரிக்கை வைத்தனர்.

இது தொடர்பான மனுவில் கூறியிருப்பதாவது: குமரி மாவட்டம் கடியபட்டணம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த மரிய நஸ்ரின் என்பவர் மகன் சகாய செல்சோ(37) மற்றும் ஜார்ஜ் என்பவரது மகன் ஆண்டனி வின்சென்ட் (33) ஆகிய இரண்டு மீனவர்களும் பஹ்ரைன் நாட்டில் தராக் மாஜித் என்பவர் படகில் மீன்பிடிப்பதற்கு வேலைக்கு அமர்த்தப்பட்டனர். இந்த இரண்டு மீனவர்களும் கடந்த 17ம் தேதி பஹ்ரைன் நாட்டில் மொராக் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிப்பதற்காக ஆழ் கடலுக்கு சென்றனர். மூன்று நாட்களிலே இந்த மீனவர்கள் மீன் பிடித்து விட்டு கரை திரும்ப வேண்டும்.  ஆனால் ஒன்பது நாட்களாகியும் இரு மீனவர்கள் இதுவரைக்கும் கரை திரும்பவில்லை. பஹ்ரைன் நாட்டில் உள்ள மீனவர்கள் கடல் பகுதி முழுவதும் தேடியும்  மீனவர்கள் இதுவரைக்கும் கண்டுபிடிக்க இயலவில்லை.

தெற்காசிய மீனவ தோழமை வளைகுடா நாட்டில் உள்ள இந்திய மீனவர்களை தொடர்பு கொண்டு அவர்கள் மீன்பிடிக்கும் அந்த நாட்டுக் கடல் பகுதியில் மாயமான மீனவர்கள் உள்ளார்களா? என்று தேடிப் பார்த்தும் ,எந்த கடல் பகுதியிலும் மாயமான மீனவர்களை  கண்டுபிடிக்க இயலவில்லை. இதனால் மீனவர்கள் நிலைமை என்ன என்பது மிகவும் அச்சத்திற்குரியதாக இருக்கிறது.
மாயமான மீனவர்கள் ஒன்பது நாட்கள் ஆகியும் கண்டுபிடிக்க இயலாதது மீனவர்கள் குடும்பத்தினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மீனவர்கள் உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்படும் முன்பு மாயமான இரண்டு மீனவர்களையும் ஈரான் அரசு உதவியோடு தேடி கண்டுபிடித்து மீட்டு தர வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. போர்க்கால அடிப்படையில் ஈரானில் மீனவர்களை தேடும் பணியில் ஈரான் அரசை ஈடுபடுத்த ஒன்றிய அரசை வலியுறுத்துமாறும் அவர்கள் குமரி மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தினர்.

Tags : Bahrain , Nagercoil: Director of Coastal Peace and Development Committee Dunstan, South Asian Fishermen's Fellowship General Secretary Churchill, Kadiyapatnam
× RELATED பஹ்ரைன் வாழ் தமிழ் மாணவர்களுக்கு 9...