திருவண்ணாமலை அருகே வனப்பகுதியில் மான்களை வேட்டையாடிய 4 பேர் கைது-நாட்டுத்துப்பாக்கி, 3 பைக்குகள் பறிமுதல்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே வனப்பகுதியில் மான்களை வேட்டையாடிய 4 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 3 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.திருவண்ணாமலை அடுத்த அத்திப்பாக்கம் காப்புக்காடு பகுதியில், மான்களை வேட்டையாடுவதாக கிடைத்த தகவலின்பேரில், திருவண்ணாமலை வனச்சரகர் சீனுவாசன் தலைமையில் வனத்துறையினர் நேற்று முன்தினம் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, ஒரு கும்பல் நாட்டுத்துப்பாக்கியால் மான்களை வேட்டையாடுவது தெரியவந்தது.அதைத்தொடர்ந்து, அந்த கும்பலை வனத்துறையினர் சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரணையில் ஆண்டியாபாளையம் கிராமத்தை சேர்ந்த முருகேசன் மகன் பஞ்சமூர்த்தி(36), தனசேகரன் மகன் விக்னேஷ்(26), அண்ணாமலை மகன் காட்டுராஜா(29), முருகன் மகன் விஜய்(23) ஆகியோர் என்பது தெரியவந்தது.

அவர்களிடம் இருந்து, உரிமம் இல்லாத நாட்டுத்துப்பாக்கி, 3 பைக்குகள், வேட்டையாடப்பட்டு இறந்த நிலையில் 2 புள்ளி மான்கள், 2 முயல்கள் மற்றும் 7 கிலோ மான் இறைச்சி உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து, கைது செய்யப்பட்ட 4 பேரையும், கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: