×

நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் இருந்து சென்னை, திருப்பூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்-ரயில்களிலும் அலைமோதிய கூட்டம்

நெல்லை : தீபாவளி பண்டிகை முடிந்து மீண்டும் பணியிருப்பிடத்திற்கு  திரும்புபவர்களுக்கு வசதியாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி  மாவட்டங்களில் இருந்து அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. ரயில்களிலும்  பயணிகள் கூட்டம் அலைமோதியது. தமிழகத்தின் பிறபகுதிகளான சென்னை,  விழுப்புரம், சேலம், ஈரோடு, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் பணி நிமித்தமாக,  தொழில் தொடர்பாகவும் தென்மாவடட்ட மக்கள் அதிகமானோர் வசித்து வருகின்றனர்.  கடந்த 24ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது.

பண்டிகைக்காக தென்மாவட்ட  மக்கள் சொந்த ஊர்வரும் வகையில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கடந்த  21, 22, 23ம் தேதிகளில் சென்னை உள்ளிட்ட பிறபகுதிகளில் இருந்து தென் மாவட்ட  மக்கள் சொந்த ஊருக்கு வரும் வகையில் அரசு போக்குவரத்து கழகத்தில் வழக்கமாக  இயக்கப்படும் 10518 பஸ்களுடன் 6300 சிறப்பு பஸ்கள் பல்வேறு பகுதிகளுக்கு  16 ஆயிரத்து 818 சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.

இருந்த போதும் பயணிகள்  நெருக்கடியிலும், ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் கொடுத்தும், ரயில்களிலும்  பயணித்து நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு தீபாவளி  பண்டிகை கொண்டாடுவதற்காக வந்தனர். கடந்த வெள்ளிக்கிழமையில் இருந்து ஏராளமானவர்கள்  சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பணி செய்பவர்கள் நெல்லை  உள்ளிட்ட தென் மாவட்டங்களில் உள்ள தங்கள் சொந்த ஊருக்கு வருகை தந்தனர். தீபாவளி பண்டிகை முடிந்து அவர்கள் நேற்று பணியிடங்களுக்கு திரும்பினர்.  இதற்கு வசதியாக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மற்றும் அரசு போக்குவரத்து  கழகங்கள் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

நெல்லை அரசு விரைவு  போக்குவரத்து கழகத்தில் இருந்து ஏற்கனவே சென்னை உட்பட வெளியூர்களுக்கு பஸ்கள் இயக்கப்படும் நிலையில்  நேற்று சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இதில் பெரும்பாலான பஸ்களில்  ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டிருந்தது.இதுபோல்  அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் நெல்லை பகுதி பணிமனைகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டன.

தென்காசி, தூத்துக்குடி,  நாகர்கோவிலில் இருந்தும் சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட தேவையான  பகுதிகளில் பிற்பகல் முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. ஸ்பேர் பஸ்கள் போக  கூடுதல் பஸ்கள் தேவைக்கு ஒன் டூ ஒன், பாயின்ட் டூ பாயின்ட் பஸ்களில் சில  சென்னைக்கு திருப்பிவிடப்பட்டன. வருகிற  ஞாயிற்றுக்கிழமை வரை சென்னை உள்ளிட்ட தொலைதூர ஊர்களுக்கு தேவைப்படும்  எண்ணிக்கையில் பஸ்கள் நெல்லையில் இருந்து இயக்கப்படும் என  போக்குவரத்துத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுபோல்  நெல்லை உள்ளிட்ட தென்மாவட்டங்களில்  இருந்து நேற்று சென்னை, கோவை செல்லும்  ரயில்களிலும் சிறப்பு ரயில்களிலும் முன்பதிவு ஏற்கனவே முடிந்துவிட்டது.

பள்ளிகளுக்கும் நேற்று விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், சென்னை, கோவை உள்ளிட்ட வெளியூர்களில் இருந்து குடும்பத்துடன் சொந்த ஊர் திரும்பியவர்கள் ரயில்களில் இடம் கிடைக்காமல் திண்டாடினர்.  ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணிக்க பயணிகள் கூட்டம் முண்டியடித்தது.  இதனால் ரயில் நிலையத்தில் அதிக கூட்ட நெரிசல் காணப்பட்டது.


27ம் தேதி வரை முன்பதிவு முடிந்தது

நெல்லை  கோட்டத்தில் பல்வேறு வழித்தடங்களில் 1773 பஸ்கள் வழக்கமாக  இயக்கப்படுகின்றன. தீபாவளி பண்டிகையொட்டி பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க  சென்னைக்கு 110 பஸ்கள் 25ம் தேதி முதல் இருநாட்கள் நெல்லை புதிய  பஸ்நிலையத்தில் இருந்து சென்னைக்கு இயக்கப்படுகிறது. ெநல்லை  அரசு விரைவு போக்குவரத்து கழம் வண்ணார்பேட்டை பணிமனை, கேடிசி நகர்  பணிமனைகளில் இருந்து தீபாவளி பண்டிகை முடிந்து சென்னை, விழுப்புரம், கோவை,  ஈரோடு, திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு 25ம் தேதி முதல் 27ம் தேதி வரை 100  சிறப்பு பஸ்கள் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதற்கான முன்பதிவுகள்  முடிந்துவிட்டன.



Tags : Paddy ,Thoothukudi ,South Kasi ,Chennai ,Tiruppur , Nellai: Nellai, Tenkasi, Thoothukudi,
× RELATED தூத்துக்குடி பொட்டலூரணி கிராமத்தில்...