×

சோளிங்கர் அருகே பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் தலைதீபாவளி கொண்டாட சென்ற புதுமாப்பிள்ளை கடத்தி கொலை: தடுக்க முயன்ற மாமனாருக்கும் அடி, உதை; கூலிப்படையை சேர்ந்த 10 பேருக்கு வலை

சோளிங்கர்: சோளிங்கர் அருகே பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த 4 மாதத்தில், தலைதீபாவளி கொண்டாட சென்ற புதுமாப்பிள்ளையை கூலிப்படையை சேர்ந்த 10 பேர் கும்பல் கடத்திச் சென்று அடித்துக்கொன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட ஐயனேரி கிராமத்தை சேர்ந்தவர் சரத்குமார்(22). இவர் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில்  நடனமாடுவதற்கான இசை குழு நடத்தி வந்தார். ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகே ஆயலாம்பேட்டையை சேர்ந்த மாணவி, சோளிங்கர் அரசு பள்ளியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு படித்துள்ளார்.

அப்போது பஸ்சில் சென்ற மாணவிக்கும், சரத்குமாருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. தற்போது மாணவிக்கு 19 வயதாகிறது. இந்நிலையில் இவர்களது காதல் விவகாரம் அறிந்த பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஆனால் பெற்றோர் எதிர்ப்பை மீறி இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து பெற்றோர் ஏற்றுக்கொண்டதால் சரத்குமாரின் வீட்டில் காதல் மனைவியுடன் வசிக்க தொடங்கினார். இந்நிலையில் ஒரே மகள் என்பதால் பெற்றோர், தலைதீபாவளிக்காக  தங்கள் வீட்டுக்கு அழைப்பு விடுத்தனர். இதனால் சரத்குமார், மனைவியுடன் மாமியார் வீட்டிற்கு சென்றார்.

தொடர்ந்து நேற்று முன்தினம் தலைதீபாவளி கொண்டாடினர். இரவு சரத்குமார் பைக்கிற்கு பெட்ரோல் போட வீட்டில் இருந்து வெளியே புறப்பட்டார். அப்போது அவரது மாமனார் உமாபதியும் உடன் சென்றார். சோளிங்கர் அடுத்த ஐப்பேடு பஸ்நிறுத்தம் அருகே உள்ள பங்க்கில் இரவு 7 மணியளவில் பெட்ரோல் போட முயன்றனர். அப்போது கையில் கத்தி, உருட்டுக்கட்டை என ஆயுதங்களுடன் 4 பைக்குகளில் வந்த 10 பேர் கும்பல் திடீரென சரத்குமாரை தாக்கியது. தடுக்க முயன்ற மாமனார் உமாபதிக்கும் சரமாரி அடி, உதை விழுந்துள்ளது. இதில் உமாபதி லேசான காயமடைந்தார்.

பின்னர் சரத்குமாரை அந்த கும்பல் பைக்கில் கடத்திச் சென்றது. இதுபற்றி உமாபதி, உறவினர்களுக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் சரத்குமாரை தேடினர். இதற்கிடையில் அவரை சுமார் 2 கி.மீ தூரத்துக்கு கடத்திய கும்பல், கூடலூர் அருகே ஒரு மறைவான இடத்தில் வைத்து சரமாரி தாக்கிவிட்டு தப்பியது. ரத்த வெள்ளத்தில் கிடந்தவரை உமாபதியும் உறவினர்களும் மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் சரத்குமார் உயிரிழந்தார். இதையடுத்து சோளிங்கர் போலீசார் கொலை வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக யாராவது கூலிப்படையை ஏவி சரத்குமாரை கொலை செய்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Solinger , Near Solinger, the bridegroom, who had gone to celebrate his love marriage despite his parents' opposition, was abducted and killed. Net for 10 mercenaries
× RELATED பள்ளிப்பட்டு அருகே வேன்-கார் மோதல்: 2 பேர் படுகாயம்