×

9 துணைவேந்தர்கள் ராஜினாமா செய்ய கெடு கேரள ஆளுநர் உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் திடீர் தடை

திருவனந்தபுரம்: யுஜிசி  நிபந்தனைகளை மீறி நியமிக்கப்பட்டதாக கூறி 9 பல்கலைக் கழக துணைவேந்தர்கள் பதவி விலகும்படி கேரள ஆளுநர் பிறப்பித்த உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. கேரள அரசுக்கும், ஆளுநர் ஆரிப் முகமதுகானுக்கும் இடையே சமீப காலமாக பனிப்போர் நிலவி  வருகிறது. இந்நிலையில், சில வருடங்களுக்கு முன்பு அப்துல் கலாம் தொழில்நுட்ப பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜேஸ்வரி, யுஜிசி நிபந்தனைகளை மீறி நியமிக்கப்பட்டதாக கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதை 2 தினங்களுக்கு முன்பு விசாரித்த உச்ச நீதிமன்றம், ராஜேஸ்வரியை டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டது. ஏற்கனவே கண்ணூர், கோழிக்கோடு, கேரளா உள்பட 9 பல்கலைக் கழக துணைவேந்தர்கள் யுஜிசி நிபந்தனைகளை மீறி நியமிக்கப்பட்டதாக ஆளுநருக்கு புகார் கொடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ராஜேஸ்வரியை உச்ச நீதிமன்றம் டிஸ்மிஸ் செய்ததை தொடர்ந்து. மற்ற 9 பல்கலைக் கழக துணைவேந்தர்களிடம் விளக்கம் கேட்டு ஆளுநர் ஆரிப் நோட்டீஸ் அனுப்பினார். மேலும், 24ம் தேதி காலை 11.30 மணிக்குள் அனைவரும் ராஜினாமா செய்யவும் உத்தரவிட்டார். இது, கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதை எதிர்த்து 5 துணைவேந்தர்களும் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். தீபாவளி தினமாக இருந்த போதிலும் நேற்று முன்தினம் மாலை இது விசாரிக்கப்பட்டது. அப்போது, ஆளுநரின் உத்தரவுக்கு நீதிபதி தேவன் ராமச்சந்திரன் தற்காலிக தடை விதித்தார். ‘துணைவேந்தர்கள் யுஜிசி நிபந்தனைகளை மீறி நியமிக்கப்பட்டிருந்தால் அவர்களை சட்டப்படித் தான் பதவி நீக்கம் செய்ய வேண்டும். 9 பேருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருப்பதால் உரிய விளக்கம் கிடைக்கும் வரை அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது,’ என நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்தார்.

Tags : Kerala Governor ,Court , Kerala Governor orders resignation of 9 Vice-Chancellors by High Court
× RELATED கரூர் அருகே அரவக்குறிச்சி...