×

குடும்ப நல நீதிமன்றத்தில் 2500 வழக்குகள் விசாரணை குமரியில் அதிகரிக்கும் விவாகரத்து-கூடுதல் கோர்ட் அமைக்கப்படுமா?

நாகர்கோவில் :  குடும்ப நல நீதிமன்றங்களில் அதிக வழக்குகள் நிலுவையில் உள்ளதால், குமரி மாவட்டத்தில் கூடுதல் மாவட்ட குடும்ப நல நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இளைய தலைமுறை தம்பதியரிடம் தற்போது விவாகரத்து என்பது சர்வ சாதாரணமாகி விட்டது. பல்வேறு காரணங்களுக்காக விவாகரத்து கோரி வழக்கு தொடரும் இளம் தம்பதிகள் பலர், இரு தரப்பிலும் சமரசத்துக்கு இடம் தராமல் வாழ்க்கையை தொலைத்து வருகின்றனர்.

‘ஒருவனுக்கு ஒருத்தி’, கணவனே கண் கண்ட தெய்வம், புல்லானாலும் புருஷன் என்ற கலாச்சார பெருமைமிக்க நம் நாட்டில் இப்போதெல்லாம் அற்ப காரணங்களுக்காக விவாகரத்து கோருவது என்பது சர்வ சாதாரணமாகி விட்டது. ஜாதகம், ஜோசியம் என பொருத்தம் பார்த்து,  லட்சக்கணக்கில் பணத்தை ெசலவழித்து திருமணம் செய்து கொள்ளும் இளம்ஜோடிகளில் பலர், தேனிலவுக்கு செல்லும் இடத்தில் கூட பரஸ்பர புரிதல் இல்லாமல் சண்டை போட்டு பிரிந்து செல்லும் விநோதம் அரங்கேறி வருகிறது.

திருமணமான 3 மாதங்களில் ஆரம்பித்து, 3 ஆண்டுகளுக்குள் திருமண வாழ்க்கை கசந்து, விவாகரத்துக்காக நீதிமன்ற படியேறி தீர்வு கிடைக்காமல் ஆண்டுக்கணக்கில் அலைந்து வருகின்றனர். இதனால் எந்த நீதிமன்றங்களிலும் இல்லாத அளவுக்கு 35 வயதுக்கு குறைவான திருமணமான இளம் தம்பதியரின் கூட்டத்தை குடும்ப நல நீதிமன்றங்களில் அதிகமாகக் காண முடிகிறது.

குமரி மாவட்டத்தில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்திலும் வழக்குகள் அதிகமாக உள்ளன. நாகர்கோவிலில் மாவட்ட குடும்ப நல நீதிமன்றம் உள்ளது. கடந்த 2019 ல் இந்த நீதிமன்றம் தொடங்கப்பட்டது. விவாகரத்து  உள்ளிட்ட குடும்பம் சம்பந்தமான வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன. வாரத்தில் இரு நாட்கள் பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் குடும்ப நல சிறப்பு நீதிமன்றம் இயங்குகிறது.

குமரி மேற்கு மாவட்ட பகுதிகளை சேர்ந்த வழக்குகள் அங்கு விசாரிக்கப்படுகின்றன. எவ்வளவு வேகமாக விசாரணை நடத்தினாலும் வழக்குகளின் எண்ணிக்கை குறைய வில்லை. நாள்தோறும் புதிது, புதிதாக விவாகரத்து வழக்குகள் தொடர்கிறார்கள். குமரி மாவட்டத்தில் தற்போது சுமார் 2,500 வழக்குகள் குடும்ப நல நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டு விசாரணையில் இருந்து வருகிறது.

மற்ற வழக்குகள் போல் இதில் வேகமாக விசாரிக்க முடியாது. கணவன், மனைவி இருவரின் மனமும் ஏற்றுக்கொள்ளும்படியிலான கருத்துக்கள் வர வேண்டும். அப்போது தான் வழக்கை வாபஸ் பெற சம்மதிப்பார்கள்.  இதை கருத்தில் கொண்டு விவாகரத்து கூறி தாக்கல் செய்யப்படும் மனுதாரர்கள், எதிர்மனுதாரர்கள் இருவருக்கும் கவுன்சிலிங் கொடுக்கப்படுகிறது.
விவாகரத்து வழக்குகள் அதிகரிப்பதற்கான காரணம் குறித்து நாகர்கோவில் நீதிமன்ற வழக்கறிஞர் மரிய ஸ்டீபன் கூறியதாவது :

பொதுவாக குடும்பநல நீதிமன்றங்களில் விவாகரத்து கோருவது, சேர்ந்து வாழக் கோருவது, ஜீவனாம்சம் கோருவது, குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு, உடல், மனரீதியிலான குறைபாடுகள், உண்மைகளை மறைத்து ஏமாற்றி திருமணம் செய்தல் போன்ற காரணங்களுக்காக வழக்குகள் தொடரப்படுகின்றன.நாளுக்குநாள் அதிகரித்து வரும் விவாகரத்து வழக்குகளால் குடும்பநல நீதிமன்றத்தில் வழக்குகள் குவிந்து வருகின்றன. 60 முதல் 70 சதவீத விவாகரத்து வழக்குகள் பெண்களால் தொடரப்படுகின்றன. இளம்பெண்கள் பலர், கணவரின் செக்ஸ் பிரச்னையை காரணம் காட்டி விவகாரத்து கேட்கிறார்கள்.

படிப்பு, சம்பாத்தியம், யாருடைய துணையுமின்றி வாழ முடியும் என்ற அசட்டு தைரியம், குழந்தையின்மை, சந்தேகம், தகாத உறவு போன்ற பல்வேறு காரணங்களால் விவாகரத்து வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.கூட்டுக் குடும்பமாக வசிப்பவர்கள் மத்தியில் இத்தகைய பிரச்னை அதிகமாக இல்லை.திருமணமான இளம் தம்பதியரிடையே சாதாரணமாக செல்போனில் ஆரம்பிக்கும் சண்டை இறுதியில் விவாகரத்தில் வந்து முடிகிறது.

வி்ட்டுக்கொடுத்து செல்லும் மனப்பக்குவம் இருவருக்குமே இருப்ப தில்லை. தகராறு நடக்கும் சமயத்தில் அவர்களை பக்குவப்படுத்த கூடிய உறவுகள் இல்லாதது விவாகரத்து வரை செல்கிறது.
குமரி மாவட்டத்தை பொறுத்தவரை திருமணத்துக்கு பின், மகளின் திருமண வாழ்க்கையில் அவர்களின் பெற்றோர் தலையீடும் அதிகமாக உள்ளது. இதுவும் விவாகரத்து வரை பிரச்னையை கொண்டு செல்கிறது.

விவாகரத்து வழங்கப்பட்டு ஜீவனாம்சம் வழங்காமல் இருப்பதை எதிர்த்தும் அதிக வழக்குகள் தொடரப்படுகிறது. இந்த வழக்குகளுக்கு விரைந்து தீர்வு காண கூடுதல் மாவட்ட குடும்ப நல நீதிமன்றம் பத்மநாபபுரத்தில்  அமைக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

செக்ஸ் பிரச்னையை காரணம் காட்டும் மனு அதிகம்

பல பெண்கள் தாங்கள் விவாகரத்து கோரி தாக்கல் செய்யும் மனுவில், செக்ஸ் பிரச்னையை முக்கியமாக காட்டுகிறார்கள். 20 ல் இருந்து 25 சதவீத மனுக்கள் இதன் அடிப்படையில் தான் உள்ளது. இவ்வாறு மனு தாக்கல் செய்தால், எளிதில் விவாகரத்து கிடைக்கும் என்ற நம்பிக்கையும் தற்போது இளம்ெபண்களிடம் உள்ளது.

Tags : Family Welfare Court , Nagercoil : As more cases are pending in family welfare courts, an additional district family welfare court will be set up in Kumari district
× RELATED மனைவி தொடர்ந்த ஜீவனாம்சம் வழக்கு;...