×

புனித் ராஜ்குமாரின் கடைசி படத்துக்கு வரிவிலக்கு: கர்நாடக முதல்வர் அறிவிப்பு

பெங்களூரு: கன்னட திரையுலகின் முன்னணி நடிகர் புனித் ராஜ்குமார் (46), கடந்த ஆண்டு மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவர் நடித்த கடைசி படம், ‘கந்ததகுடி’. இது கர்நாடக மாநில இயற்கை வளங்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற ெமசேஜை சொல்கிறது. இதன் டீசரையும், புனித் ராஜ்குமாரையும் பிரதமர் மோடி பாராட்டினார். ‘உலகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கானவர்களின் இதயங்களில் அப்பு (புனித் ராஜ்குமார்) இன்னும் வாழ்ந்து வருகிறார். அறிவுக்கூர்மையான ஆளுமை
யுடன் ஆற்றல் நிறைந்தவராகவும், ஒப்பற்ற திறமை படைத்தவராகவும் விளங்கினார். இயற்கை அன்னைக்கும், கர்நாடகாவின் இயற்கை அழகு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் ‘கந்ததகுடி’ ஒரு சமர்ப்பணம். இந்த முயற்சிக்கு எனது வாழ்த்துகள்’ என்று அவர் தனது டிவிட்டரில் கூறியிருந்தார்.

இந்நிலையில், ‘கந்ததகுடி’ படத்துக்கு கர்நாடக அரசு வரிவிலக்கு அளித்துள்ளது. வரும் 28ம் தேதி ரிலீசாகும் இப்படத்துக்கான சிறப்புக்காட்சி, புனித் பர்வ என்ற பெயரில் பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நடந்தது. அப்போது கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை பேசுகையில், ‘புனித் ராஜ்குமார் நம்மைவிட்டு சென்றுவிட்டதாக நினைக்க வேண்டாம். அவர் நம்முடன்தான் இருக்கிறார். புனித் ராஜ்குமார் நடித்துள்ள ‘கந்ததகுடி’, கன்னட நாட்டின் கலை மற்றும் இயற்கைக்குப் பெருமை சேர்ப்பதாகவும், வனம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகவும் உள்ளது. அனைவரும் இந்தப் படத்தை பார்க்க வேண்டும். டாக்டர் ராஜ்குமாரின் குணங்கள் 100 சதவீதம் புனித் ராஜ்குமாரிடமும் இருந்தது. அவர் கடைசியாக நடித்துள்ள ‘கந்ததகுடி’ படத்துக்கு முழு வரிவிலக்கு அளிக்கப்படும்’ என்றார். முன்னதாக பெங்களூருவில் முதல்வர் பசவராஜ் பொம்மை அளித்த பேட்டியில், ‘மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது வழங்க வேண்டும் என்று மாநில அரசு ஏற்கனவே முடிவு செய்தது.

அதன்படி, வரும் நவம்பர் 1ம் தேதி விதான சவுதா வளாகத்தில் மாலை 5 மணிக்கு நடக்கும் கன்னட ராஜ்யோற்சவ விழாவில், புனித் ராஜ்குமாருக்கான விருது அவரது குடும்பத்தினரிடம் வழங்கப்படும். கர்நாடகத்தில் இதுவரை 8 பேருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2009ம் ஆண்டுக்குப் பிறகு யாருக்கும் இந்த விருது வழங்கப்படவில்லை. கன்னட திரைத்துறை, கலாசாரம் மற்றும் கன்னட மொழிக்கு ஆற்றிய சேவைக்காக புனித் ராஜ்குமாருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. அவர் கர்நாடகத்தின் உண்மையான ரத்னா. அவர் மக்களின் இதயங்களில் நிரந்தரமாக வாழ்கிறார். அவரது சாதனைகள் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உந்துசக்தியாக திகழ்கிறது. கர்நாடக ரத்னா விருது வழங்கிய பின், அடுத்த 10 நாட்களில் பெங்களூருவில் 3 இடங்களில் புனித் ராஜ்குமார் குறித்த நிகழ்ச்சிகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது’ என்றார்.

Tags : Puneeth Rajkumar ,Karnataka ,Chief Minister , Tax Exemption for Puneeth Rajkumar's Last Film: Karnataka Chief Minister Announces
× RELATED வறட்சி நிவாரணத்தை உடனடியாக விடுவிக்க...