×

சொந்த ஊர்களுக்கு சென்ற சென்னைவாசிகள், கோயம்பேடு மார்க்கெட்டில் வியாபாரம் மந்தம்: காய்கறிகள் தேக்கம் வியாபாரிகள் தகவல்

அண்ணாநகர்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னைவாசிகள் ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு சென்றதால், கோயம்பேடு மார்க்கெட்டில் வியாபாரம் மந்தமாகி,  காய்கறிகள் தேங்கின. அதேவேளையில் பூக்கள் விலை அதிகரித்துள்ளது என, வியாபாரிகள் தெரிவித்தனர். சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து லாரிகளில் காய்கறிகள் கொண்டுவரப்படுகிறது. காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் சென்னையில் இருந்து வியாபாரிகள் வந்து மொத்தமாக காய்கறிகள், பழங்கள் வாங்கி சென்று விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில், தீபாவளி பண்டிகை முன்னிட்டு தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை என்பதால்,  சென்னையில் வசிக்கின்ற  தூத்துகுடி, மதுரை, திருநெல்வேலி போன்ற தென்மாவட்டங்களை சேர்ந்த பெரும்பாலானவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றனர்.

வியாபாரிகளும் சொந்த ஊர்களுக்கு சென்றதால் கோயம்பேடு காய்கறி மார்க்கெட் நேற்று காலை வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவை தேக்கம் அடைந்துள்ளது. ஆனால், பூக்கள் விலை உயர்ந்துள்ள நிலையிலும், வியாபரம் மும்முரமாக நடைபெற்றது. இதுகுறித்து, கோயம்பேடு காய்கறி சிறு மொத்த சங்க தலைவர் எஸ்.எஸ்.முத்துகுமார் கூறுகையில், ‘‘கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினமும் 7,000 டன் காய்கறிகள் தேவைப்படுகின்றன. இன்று தீபாவளி பண்டிகை என்பதால் நேற்று காலை 5,000 டன் காய்கறிகள் வந்து குவிந்துள்ளன. அனைத்து காய்கறிகளின் விலை குறைந்துள்ள நிலையில், காய்கறிகளை வாங்க வரும் சில்லறை வியாபாரிகள், இல்லதரசிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதனால் மார்க்கெட் வெறிச்சோடி காணப்படுகிறது. வியாபாரம் இல்லாததால் அனைத்து காய்கறிகளும் தேக்கம் அடைந்து, வியாபாரிகள் கடும் வேதனை அடைந்துள்ளனர்.

ஆனால், பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை மூன்று மடங்கு உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம்  ஒரு கிலோ மல்லி ரூ.800க்கும், முல்லை ரூ.450க்கும், ஜாதி மல்லி ரூ.300க்கும், கனகாம்பரம் ரூ.600க்கும், சம்பங்கி 120க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. நேற்று காலை ஒரு கிலோ மல்லி ரூ.1,000க்கும், முல்லை ரூ.800க்கும், ஜாதிமல்லி ரூ.500க்கும் கனகாபரம் ரூ.1,000க்கும், சாக்லெட் ரோஸ் ரூ.140க்கும், பன்னீர்ரோஸ் ரூ.120க்கும், மஞ்சள் ரோஸ் ரூ.160க்கும், அரளி பூ ரூ.200க்கும், தவனம் ரூ.150க்கும், மருகு ரூ.120க்கும் விற்பனை செய்யப்பட்டது.’’ என்றார். சில்லறை பூ வியாபாரி கூறும்போது, ‘இன்று தீபாவளி பண்டிகை என்பதால் மார்க்கெட்டில் ஒரே நாளில் பூக்களின் விலை மூன்று மடங்கு உயர்ந்துள்ளது. இது சில்லரை பூ வியாபாரிகளின் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது’ என்றார்.

Tags : Chennai ,Koyambedu , Residents of Chennai who have gone to their hometowns, business is slow in Koyambedu market: Vegetables stockpile traders information
× RELATED கோயம்பேடு மார்க்கெட்டிற்கு வெளிமாநில...