மக்கள் வழக்கம் போல் வாங்கி மகிழ்கின்றனர்: அரிசிக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பால் தீபாவளி பலகார விலை உயர்வு

நெல்லை: இந்த ஆண்டு ஒன்றிய அரசு அரிசிக்கு ஜிஎஸ்டி வரி விதித்தால் முறுக்கு, அதிரசம் உள்ளிட்ட தீபாவளி பலகாரங்கள் விலை உயர்ந்துள்ளது. இந்தியாவிலும் உலகம் முழுவதும் வாழும் இந்தியர்களால் தீபாவளி பண்டிகை நாளை மறுதினம் கொண்டாடப்பட உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக   கொரோனா வாட்டி வதைத்ததால் மக்கள் தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாட   முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது கொரோனாவில் இருந்து விடுபட்டுள்ளதால் மக்கள் 2   ஆண்டுகளுக்கு பின்னர் வழக்கமான உற்சாகத்துடன் தீபாவளி கொண்டாட   தயாராகிவிட்டனர்.

சமீப நாட்களாக வீடுகளில் பெயரளவிற்கே எண்ணை சட்டி வைத்து வடை போன்ற   பலகாரங்களை தீபாவளிக்கு தயாரிக்கின்றனர். கூடுதல் தேவைக்கு வெளியிலேயே   வாங்கி மகிழ்கின்றனர். இதன் காரணமாக வடை முதல் அதிரசம், சுசியம் வரை   அனைத்து வகை தீபாவளி பலகாரங்களை தயாரித்து வழங்கும் கடைகள் ஏராளமாக தோன்றி   விட்டன.

 

தீபாவளியை முன்னிட்டு நண்பர்கள், உறவினர்களுக்கு வழங்கி  மகிழ்வதற்காக இனிப்பு வகைகள் மற்றும் தீபாவளி பலகாரங்கள் தயாரிக்கும் கடைகளில்  மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. பலர் ஒரு வாரத்திற்கு முன்னதாகவே முன்பதிவு செய்து வாங்கி சென்றனர். நெல்லை, பாளை, மேலப்பாளைம், டவுன் உள்ளிட்ட பகுதிகளில் பல சிறிய உணவகங்கள்  மற்றும் பலகாரங்களை வழக்கமாக தயாரிக்கும் கூடங்களிலும் இரவு பகலாக தீபாவளி  பண்டங்கள் தயாரிக்கும் பணிகள் நடைபெறுகின்றன.

அதே நேரத்தில் ஒன்றிய அரசு சமீபத்தில் அரிசி மூடைகளுக்கு ஜிஎஸ்டி வரி விதித்தது. இது அரிசி வியாபாரிகளை மட்டுமின்றி பொதுமக்களையும் தற்போது தீபாவளி பலகாரம் தயாரிப்பவர்களையும் பாதித்துள்ளது.

25 கிலோ அரசி மூடை வாங்கினாலும் ஜிஎஸ்டி கட்டவேண்டிய நிலை உள்ளது. மேலும் எண்ணெய் உள்ளிட்ட மூலப்பொருட்கள் விலை உயர்ந்ததாலும் தீபாவளி பலகாரங்கள் விலை 1 ரூபாய் முதல் 2 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. சில கடைகளில் முறுக்கு, அதிரசம், ஒன்றுக்கு தலா ரூ.6க்கும் 3 ரூபாய்க்கு விற்கப்பட்ட தட்டை ரூ.5க்கும், தேன்குழல், நெய் உருண்டை ரூ7க்கும், முந்திரிகொத்து ரூ.8க்கும் விற்கப்படுகிறது. பெரிய விற்பனை கடைகளில் இவற்றின் விலை மேலும் உயர்ந்துள்ளது. விலை உயர்ந்தாலும் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக வேறு வழியின்றி தேவைக்கு ஏற்ப மக்கள் வாங்கிச்சென்றனர்.

Related Stories: