×

திருவில்லிபுத்தூரில் தீபாவளியை முன்னிட்டு தித்திக்கும் பால்கோவா, சுவீட்ஸ் விற்பனை அமோகம்: பண்டிகையை கொண்டாட பாக்ஸ், பாக்ஸாக வாங்கிச் செல்லும் மக்கள்

திருவில்லிபுத்தூர்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கடைகளில் பால்கோவா விற்பனை களைகட்டுகிறது. பொதுமக்கள் பாக்ஸ், பாக்ஸ்களாக இனிப்புகளை வாங்கிச் செல்கின்றனர். ஒரு சிலர் வெளியூரில் உள்ள உறவினர்களுக்கும் வாங்கி அனுப்புகின்றனர். இதனால், பாலுக்கு அதிக டிமாண்ட் ஏற்பட்டுள்ளது. சுவீட்ஸ்களின் விலையும் அதிகரித்துள்ளது. விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரில் தயாராகும் சுவை மிகுந்த பால்கோவாவிற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

ஆண்டுதோறும் நான்கு சமயங்களில் பால்கோவா விற்பனை அதிகமாக இருக்கும். திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்டம், ஐயப்பன் கோயில் சீஷன், குற்றாலம் சீஷன் மற்றும் தீபாவளி பண்டிகையின்போது பால்கோவா விற்பனை களைகட்டும். இதன்படி, தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே இருப்பதால், பால்கோவா விற்பனை களைகட்டியுள்ளது.

நெல்லைக்கு அல்வா, திருவில்லி.க்கு பால்கோவா சங்கரன்கோவில் என்றால் பிரியாணி, சாத்தூர் என்றால் காராச்சேவு,  என்பது போல திருவில்லிபுத்தூர் என்றால் தித்திக்கும் பால்கோவாவே நினைவுக்கு வரும். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பால்கோவா தயாரித்தாலும், திருவில்லிபுத்தூரில் தயாரிக்கப்படும் பால்கோவாவிற்கு தனிச்சுவையும், மவுசும் உண்டு. எனவே, திருவில்லிபுத்தூருக்கு அதிகம் பேர் வந்து பால்கோவா வாங்கிச் செல்கின்றனர். ஒரு சில குறிப்பிட்ட பால்கோவா விற்பனை நிலையங்களில் தயாரிக்கப்படும் பால்கோவாவிற்கு டிமாண்ட் ஏற்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை நேரம் என்பதால், திருவில்லிபுத்தூர் பகுதியில் வசிப்பவர்கள் தங்கள் உறவினர்கள் மற்றும் சொந்த பந்தங்களுக்கு பால்கோவாவை வாங்கி அனுப்புகின்றனர். பால்கோவா மட்டுமின்றி, அதனோடு தொடர்புடைய பியூர் கோவா மற்றும் பால் பேடா, பால் கேக், பால் அல்வா என பால் ஸ்வீட்டுகள் அனைத்தும் அதிக அளவு விற்பனை ஆகி வருகிறது. பல்வேறு இனிப்புகள் தயாரிக்கப் பயன்படும் வகையில், பால்கோவாவில் சீனி போடாமல் பியூர் கோவாவும் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த பியூர் கோவா திருவில்லிபுத்தூர் பகுதியில் அதிகளவு தயாரிக்கப்படுகின்றது. இங்கிருந்து பல்வேறு வகையான பால் சுவீட்டுகள் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

பாலின் தேவை அதிகரிப்பு: திருவில்லிபுத்தூர் பகுதியில் பால்கோவா தயாரிக்கும் நிறுவனங்கள் அதிகமாக உள்ளன. இருப்பினும் ஒரு சில நிறுவனங்களின் பால்கோவாவிற்கும் மட்டும் டிமாண்ட் அதிகரித்துள்ளது. பால் சுவீட்ஸ்கள் தயாரிக்க பயன்படும் பாலிற்கு கடுமையான டிமாண்ட் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பால்கோவா விற்பனை செய்கின்றனர். காண்போர் கண்களை கவரும் வகையில், வண்ண வண்ண கலரில், பால் ஸ்வீட்டுகளும் பால்கோவாவும் தயாரித்து விற்பனை செய்கின்றனர். இது தவிர வெளியூர்களுக்கு விற்பனைக்கு அனுப்புகின்றனர்.

தீபாவளியை முன்னிட்டு ஸ்வீட்டுகள் அதிகளவு தயாரிக்கப்படுவதால், பாலின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் திருவில்லிபுத்தூர் பகுதியில் இனிப்புகள் தயாரிக்க பாலுக்கு டிமாண்ட் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். பால்கோவா விலை உயர்வு: திருவில்லிபுத்தூரில் ஒரு சில குறிப்பிட்ட நிறுவனங்களின் பால்கோவா ஒரு கிலோ ரூ.300க்கு விற்பனை செய்து வந்தனர். தற்போது விலை உயர்வாக ரூ.320 விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் மில்க் ஸ்வீட்ஸ்கள் இதுவரை ஒரு கிலோ ரூ.440க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது ரூ.480 ஆக விலை உயர்ந்துள்ளது.

இது குறித்து பால்கோவா தயாரித்து விற்கும் ஒருவர் கூறுகையில், ‘கடந்த தீபாவளி பண்டிகையை விட, தற்போது பால்கோவா மற்றும் பால் ஸ்வீட்ஸ்களின் விற்பனை அதிகரித்துள்ளது. பொதுமக்களுக்கு தேவையான அளவிற்கு பால்கோவா இல்லை என்று சொல்லும் அளவிற்கு வழங்கி வருகிறோம். இருந்தாலும் தற்போது பால் டிமாண்ட் ஏற்பட்டுள்ளதால், குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே பால்கோவா மற்றும் பால் ஸ்வீட்டுகள் வழங்க முடிகிறது. தேவை அதிகரிப்பால் இயந்திரம் மூலமும் பால்கோவா தயாரித்து வழங்குகின்றோம்’ என்றார்.

Tags : Thiruvilliputhur ,Diwali Balkoa , Thiruvilliputhur, Diwali, Tithikkum Balkowa, Sweets sale is huge,
× RELATED செங்கல் சூளை தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் விநியோகம்