×

குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையில் கோயம்பேடு மார்க்கெட்டில் கண்காணிப்பு கோபுரங்கள்: போலீசார் தீவிர சோதனை

அண்ணாநகர்: கோயம்பேடு மார்க்கெட்டில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி குற்றச் சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்கும் வகையில், போலீசார் கோபுரங்கள் அமைத்து கண்காணித்து வருகின்றனர். மேலும், இங்கு வரும் பொதுமக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தி வருகின்றனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டிற்கு பொதுமக்களும், வியாபாரிகளும் அதிகளவில் வந்து செல்கின்றனர். இதனால், மார்க்கெட்டில் எந்நேரமும் கூட்ட நெரிசல் காணப்படுகிறது. இதை  பயன்படுத்தி, பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் பணம், நகை மற்றும் செல்போன் திருட்டு போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.

இவற்றை தடுக்க, கோயம்பேடு போலீசார் சார்பில், கோயம்பேடு மார்க்கெட்டில் 9 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில், போலீஸ்காரர்கள் சுழற்சி முறையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர். மேலும், பைனாகுலர் மூலம் கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி போலீசார் கூறுகையில், ‘‘கோயம்பேடு மார்க்கெட்டில் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி கண்காணிப்பு கோபுரம் அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறோம். தீபாவளி முடியும் வரை கண்காணிப்பு பணி நடைபெறும். மார்க்கெட்டுக்கு வருகின்ற பொதுமக்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். யார் மீதாவது சந்தேகம் ஏற்பட்டால் உடனடியாக காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும்,’’ என்றனர்.

Tags : Koyambedu Market , Watchtowers in Koyambedu Market to prevent crime: Police intensively search
× RELATED கோயம்பேடு மார்க்கெட்டிற்கு வெளிமாநில...