×

சுற்றுலா தலமான ஏலகிரி மலையில் கனமழையால் உருண்டு விழுந்த பாறைகள் அகற்றம்: நெடுஞ்சாலைத்துறையினர் உடனடி நடவடிக்கை

ஏலகிரி:  சுற்றுலா தலமான ஏலகிரி மலையில் கனமழை காரணமாக உருண்டு விழுந்த பாறைகளை நெடுஞ்சாலைத்துறையினர் உடனடியாக அகற்றினர். திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏலகிரி மலை தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. இங்கு பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். எப்போதும் ஒரே சீதோஷ்ண நிலை இருப்பதால் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

ஏலகிரி மலை செல்லும் பாதையில் 14 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. மழைக்காலங்களில் இந்த சாலையில் அடிக்கடி பாறைகள் உருண்டு விழுகின்றன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. அதேபோல், நேற்று கனமழை பெய்த நிலையில்  2வது வளைவு மலைப்பாதையில் பாறைகள் திடீரென உருண்டு விழுந்தன. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் சீனிவாசன் உத்தரவின்பேரில், சாலை ஆய்வாளர்  எஸ்.எஸ்.வெங்கடேசன் மற்றும் சாலை பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாதையில் கிடந்த பாறைகளை அப்புறப்படுத்தி, அங்கு வாகன நெரிசல் ஏற்படுவதற்கு முன்பு நடவடிக்கை எடுத்தனர்.


Tags : Elagiri , Tourist Spot, Elagiri Hill, Heavy Rain, Clearing of Fallen Rocks, Highways Department
× RELATED சுற்றுலாதலமான ஏலகிரி மலைப்பாதையில்...