×

கன்னியாகுமரி, அனந்தபுரி எக்ஸ்பிரஸ் 2 முக்கிய ரயில்கள் இயக்கத்தில் நாளை முதல் மாற்றம்: புதிய கால அட்டவணை அமல்

நாகர்கோவில்: கன்னியாகுமரி, அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கத்தில் நாளை முதல் மாற்றம் அமலுக்கு வருகிறது. தென் மாவட்டங்களில் இருந்து சென்னை செல்வதற்கு அதிக பயணிகளை தேர்வு செய்வது கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் ஆகும். குருவாயூர், அனந்தபுரி, நெல்லை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட சென்னை செல்லும் ரயில்களை ஒப்பிடுகையில் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் அதிவேக ரயில் ஆகும். ஆகவே தென் மாவட்ட மக்கள் மத்தியில் அதற்கு மவுசு அதிகம். இந்த ரயிலில் நாகர்கோவில் இருந்து தினசரி சராசரியாக 1000 பே ர் பயணம் செய்கின்றனர். நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்துக்கு வரும் வருவாயில் 50 சதவீதம் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் மூலம் கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ரயில் கன்னியாகுமரியிலிருந்து மாலை 5.05 மணிக்கு புறப்பட்டு 5.20க்கு நாகர்கோவில் சந்திப்பு வரும். பின்னர் 5.22க்கு நாகர்கோவில் சந்திப்பில் இருந்து புறப்பட்டு, 6.40க்கு திருநெல்வேலி சந்திப்பை சென்றடையும். திருநெல்வேலியில் 30 நிமிடங்களுக்கு மேல் நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னர் சென்னைக்கு மறுநாள் காலை 6.10 மணிக்கு செல்கிறது. தற்ேபாது இந்த ரயில் வேகம் அதிகரிக்கப்பட்டு நெல்லையில் அதிக நேரம் நிறுத்தி வைக்கப்படுவது தவிர்க்கப்பட்டு, அந்த நேரத்துக்கு பதிலாக கன்னியாகுமரியிலிருந்து தாமதமாக புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய கால அட்டவணைப்படி கன்னியாகுமரியில் இருந்து, மாலை 5.05 மணிக்க பதிலாக சுமார் 40 நிமிடம் தாமதமாக 5.45 மணிக்கு புறப்படும்.

நாகர்கோவிலுக்கு மாலை 6.07 மணிக்கும், வள்ளியூருக்கு 6.35 மணிக்கும், நெல்லைக்கு 7.20 மணிக்கும் வந்து சேரும். 5 நிமிடங்கள் மட்டுமே நெல்லையில் நிறுத்தப்பட்டு, உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு செல்கிறது. புதிய கால அட்டவணை காரணமாக தேவையின்றி அரைமணி நேரம் நெல்லையில் நிறுத்தி வைக்கப்படுவது தவிர்க்கப்பட்டு உள்ளது. இந்த புதிய கால அட்டவணை நாளை  (20ம் தேதி) முதல் அமலுக்கு வருகிறது. இதே போல் ரயில் எண் 16723/16724 சென்னை  எழும்பூர் - கொல்லம் ஜங்ஷன் - சென்னை எழும்பூர் இடையே இயங்கும் தினசரி ரயிலான அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் நாளை (20ம்  தேதி) முதல், நாகர்கோவில் டவுன் ரயில் நிலையம் வழியாக இயக்கப்படுகிறது.

இந்த ரயில் நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்துக்கு வந்து பின்னர் இன்ஜின் மாற்றப்பட்டு, அதன் பின்னர் நெல்லைக்கு புறப்பட்டு செல்லும். ஆனால் நாளை முதல் டவுன் ரயில் நிலையம் வழியாக இயக்கப்படுவதால், இன்ஜின் மாற்றப்பட வேண்டிய தேவை இருக்காது. இந்த ரயில் டவுன் ரயில் நிலையத்தில் 3 நிமிடங்கள் நிறுத்தப்படும். இந்த புதிய நடைமுறை நாளை முதல் அமலுக்கு வருகிறது. இதற்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் வழங்கியுள்ளது. சென்னை எழும்பூர் - கொல்லம் சந்திப்பு ( ரயில் எண்: 16723) அனந்தபுரி  எக்ஸ்பிரஸ் காலை 8.47க்கு நாகர்கோவில் டவுன் வந்து சேரும். 8.50க்கு புறப்படும். இரணியலுக்கு 9.09க்கு சென்று 9.10க்கு புறப்படும்.

குழித்துறைக்கு 9.25க்கு சென்று 9.28க்கும், பாறாசாலைக்கு 9.39க்கு சென்று 9.40க்கும், நெய்யாற்றின்கரைக்கு 9.52க்கு சென்று 9.53க்கும் புறப்படும்.  திருவனந்தபுரம் சென்ட்ரலை காலை 10.15 மணிக்கு சென்றடையும். 10.20க்கு  அங்கிருந்து புறப்பட்டு 10.56க்கு வர்க்கலை சிவகிரி, 11.09க்கு பரவூர் சென்று காலை 11.50க்கு கொல்லம் சென்று சேரும். மறுமார்க்கத்தில் (ரயில் எண் 16724) கொல்லம் ஜங்ஷன் - சென்னை எழும்பூர் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் மாலை 3.40 மணிக்கு  கொல்லத்தில் இருந்து புறப்படும். பரவூர் 3.53, வர்க்கலை சிவகிரி 4.04க்கு வந்து திருவனந்தபுரம் சென்ட்ரலை 4.45க்கு வந்தடையும். 4.50க்கு அங்கிருந்து  புறப்பட்டு 5.12க்கு நெய்யாற்றின்கரைக்கு வந்து 5.13க்கும், பாறசாலைக்கு 5.25க்கு வந்து 5.26க்கும், குழித்துறைக்கு 5.37க்கு வந்து 5.40க்கும், இரணியலுக்கு 5.55க்கு வந்து 5.56க்கும் புறப்படும்.

நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்துக்கு மாலை 6.10க்கு வந்து 6.13க்கு புறப்படும். ஆரல்வாய்மொழிக்கு 6.39க்கு சென்று  6.40க்கும், வள்ளியூருக்கு 6.59க்கு சென்று 7 மணிக்கும், நாங்குநேரிக்கு  7.10க்கு சென்று 7.11க்கும் புறப்படும். திருநெல்வேலி முதல் சென்னை எழும்பூர் வரையிலான கால அட்டவணை மாற்றம் ஏதும் இந்த ரயிலுக்கு  செய்யப்படவில்லை. டவுன் ரயில் நிலையத்தை மேம்படுத்தும் வகையில் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் தற்போது அங்கிருந்து இயக்கப்படுவது ரயில் பயணிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

Tags : Kannyakumari ,Anantapuri ,Amal , Kanyakumari, Ananthapuri Express 2 Major Trains Changed From Tomorrow: New Time Table Effective
× RELATED பொய்யானது பாஜகவின் வாரிசு அரசியல்...