×

தீபாவளி பண்டிகைக்காக குமரி ஆவினில் தயாராகும் நெய் மைசூர் பாகு-16 டன் வரை விற்பனை செய்ய இலக்கு

நாகர்கோவில் :  தீபாவளி பண்டிகைக்காக குமரி ஆவினில், நெய் மைசூர்பாகு தயாரிக்கப்பட்டு வருகிறது. 16 டன் வரை தயாரித்து விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்துள்ளனர்.
தீபாவளி பண்டிகை வருகிற 24ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தீபாவளியையொட்டி ஆவினில் வித, விதமான இனிப்பு வகைகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த முறை மண்டலம் வாரியாக பிரிக்கப்பட்டு இனிப்பு வகைகள் தயாராகிறது. அந்த வகையில் குமரி மாவட்ட ஆவினில், இந்த முறை நெய் மைசூர் பாகு தயாரிக்கப்படுகிறது.

 இதற்காக வெளி மாவட்டத்தில் இருந்தும் பணியாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். அரசு துறைகளில் உள்ளவர்கள் இனிப்பு வகைகளை தீபாவளிக்கு வினியோகம் செய்வது வழக்கம். இதற்காக ஆவினில் ஆர்டர் செய்து வருகிறார்கள். அந்த வகையில் குமரி ஆவினில் தயாரிக்கப்படும் மைசூர் பாகு பெரும் வரவேற்பை பெற்று ஆர்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளது. அரசு போக்குவரத்து கழகம், மின்வாரியம், பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம், மத்திய கூட்டுறவு வங்கி என பல்வேறு அரசு துறைகளில் இருந்து ஆர்டர்கள் வந்துள்ளன. அதிகளவில் ஆர்டர்கள் வருவதால் மைசூர் பாகு தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இது தவிர  திருநெல்வேலியில் இருந்து அல்வா, வில்லிபுத்தூரில் இருந்து பால்கோவா, சென்னையில் இருந்து மில்க் கேக் உள்ளிட்ட பல்வேறு வகையிலான இனிப்பு வகைகள் போன்றவை ஆர்டருக்கு ஏற்ப வரவழைக்கப்பட்டும் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

ஆர்டர்கள் பேரில் இல்லாமல் குமரி மாவட்டத்தில் உள்ள ஆவின் பாலகங்களிலும் இந்த வகையிலான இனிப்பு வகைகள் விற்பனைக்காக உள்ளன. 250 கிராம் மைசூர் பாகு ரூ.140க்கு விற்பனை செய்யப்படுகிறது. சுத்தமான நெய் ெகாண்டு மைசூர் பாகு தயாரிக்கப்படுகிறது. இது குறித்து குமரி மாவட்ட ஆவின் பொது மேலாளர் சாரதா கூறியதாவது :

தீபாவளியையொட்டி ஆவின் சார்பில் இனிப்பு வகைகள் தயாரித்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் வாங்கி விற்பனை செய்கிறோம். இந்த வருடம், குமரி மாவட்ட ஆவினில் மைசூர் பாகு தயாரித்து குமரி மாவட்டம் மட்டுமின்றி விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. பல்வேறு அரசு துறைகளில் இருந்து ஆர்டர்கள் வருகின்றன. இதுவரை சுமார் 8 டன் மைசூர் பாகு தயாரித்து விற்பனை செய்து உள்ளோம்.

மொத்தம் 16 டன் மைசூர் பாகு தயாரிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சுத்தமான நெய்யை ெகாண்டு தயாரிக்கிறோம். குமரி மாவட்டத்ைத பொறுத்தவரை பால் பொருட்கள் எதுவும் தட்டுப்பாடு கிடையாது. நாள் ஒன்றுக்கு சுமார் 22,000 லிட்டர் வரை விற்பனை செய்யப்படுகிறது. வெளி மாவட்டத்தில் இருந்தும் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. தீபாவளிக்கான ஆர்டர் தொடர்ந்து பெறப்படுகிறது. வரும் 21ம் தேதி வரை தேவைப்படுகிறவர்கள் ஆர்டர் கொடுக்கலாம் என்றார்.

Tags : Kumari ,Awain ,Diwali ,Mysore ,Baku , Nagercoil: For Diwali festival, Ghee Mysorebau is being prepared in Kumari Awain. They have set a target to produce and sell up to 16 tonnes.
× RELATED கன்னிப்பூ சாகுபடிக்கு அணைகள்...