கோயம்பேட்டில் பரபரப்பு பிளாஸ்டிக் கவர் விற்ற 2 கடைகளுக்கு சீல்: 4 கிலோ பறிமுதல், சிஎம்டிஏ அதிகாரிகள் அதிரடி

அண்ணாநகர்: கோயம்பேட்டில், பிளாஸ்டிக் கவர் விற்ற 2 கடைகளுக்கு சிஎம்டிஏ அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும், அந்த கடைகளில் இருந்து 4 கிலோ பிளாஸ்டிக் கவர்களை பறிமுதல் செய்தனர். சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள காய்கறி, பழம், பூ மற்றும் உணவு தானிய மார்க்கெட்டில் பிளாஸ்டிக் கவர்களை முற்றிலும் ஒழிக்க அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் சாந்தி தலைமையில், 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. ஒரு குழுவில் 10 பேர் வீதம் அனைத்து மார்க்கெட்டிலும் கண்காணித்து பிளாஸ்டிக் கவர்கள் விற்பனை செய்யும் கடைகள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சில வியாபாரிகள், அதிகாரிகளின் பேச்சை கேட்காமல் மீண்டும் பிளாஸ்டிக் கவர்கள் தொடர்ந்து விற்பனை வருகின்றனர்.

இந்நிலையில், கோயம்பேடு அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் திடீரென மார்க்கெட்டில் ஆய்வு செய்தார். அப்போது 2 கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் விற்பனை செய்வதை பார்த்து அவற்றை பறிமுதல் செய்தார். பின்னர் பிளாஸ்டிக் கவர்கள் விற்பனை செய்த இரண்டு கடைகளுக்கு சீல் வைத்தனர். கடை உரிமையாளரை அழைத்து பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்த கூடாது என்றும் பிளாஸ்டிக் கவர்கள் விற்பனை செய்தால் கடைக்கு சீல் வைத்து உரிமம் ரத்து செய்யப்படும் என்று எச்சரித்ததுடன் மறுபடியும் பிளாஸ்டிக் கவர்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.

மேலும் அவர் கூறுகையில், ‘‘கோயம்பேடு மார்க்கெட்டில் பிளாஸ்டிக் கவர்களை விற்பனை செய்யும் கடைகளை கண்டறிந்து கடைகளுக்கு அபராதம் விதிப்பதுடன் கடையின் உரிமம் 3 மாதங்களுக்கு ரத்து செய்யப்படும். இதுவரை பிளாஸ்டிக் கவர்கள் விற்பனை செய்த 20க்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல் வைத்துள்ளோம். ஒரு பாக்கெட் பிளாஸ்டிக் கவர்கள் கூட கடைகளில் வைத்து விற்பனை செய்தால் அந்த கடைக்கு சீல் வைத்து உரிமம் மூன்று மாதத்துக்கு ரத்து செய்யப்படும். அனைத்து வியாபாரிகளும் பிளாஸ்டிக் கவர்களை ஒழிப்பதற்கு ஒத்துழைக்க வேண்டும்’’ என்றார்.

Related Stories: