×

ஸ்டான்லியில் உலக விபத்து தின நிகழ்ச்சி விபத்தில் சிக்குபவர்களுக்கு உதவி செய்ய முன்வர வேண்டும்: பொதுமக்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுரை

சென்னை: விபத்தில் சிக்குபவர்களுக்கு, எல்லோரும் உதவி செய்ய முன்வர வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி வெள்ளி விழா அரங்கில், உலக விபத்து தினம் மற்றும் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர்ஜிவால் கலந்து கொண்டனர். அப்போது, அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: தமிழ்நாட்டில் உள்ள  36 மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளுக்கும், உடல் உறுப்பு உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் 50 லட்சம் வரை ஆண்டு ஒன்றுக்கு விபத்தினால் மரணம் அடைகிறார்கள். இந்தியாவில் 2021ல் மட்டும் 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சாலை விபத்துகள் மூலம் உயிரிழந்துள்ளார்கள்.

முதல் 48 மணி நேரத்திற்கு சிகிச்சை அளிப்பதுதான் சவாலான ஒன்று, 228 அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் உள்பட மொத்தம்  673 மருத்துவமனைகள் தமிழ்நாட்டில் உள்ளன. இந்த மருத்துவமனைகளில் இன்னுயிர் காப்போம் திட்டம் செயல்பட்டு வருகிறது. விபத்து என்றால் உடனடியாக யாரும் முன்வந்து உதவி செய்ய மாட்டார்கள். பார்த்து பரிதாபப்பட்டு சென்று விடுவார்கள். அவ்வாறு செல்லக்கூடாது. விபத்தில் சிக்குபவர்களுக்கு, எல்லோரும் உதவி செய்ய முன்வர வேண்டும். தமிழகத்தில், 1 லட்சத்து 20 ஆயிரத்து 918 பேர் இன்னுயிர் காப்போம் திட்டத்தில் இதுவரை பயனடைந்து உள்ளனர். இதில், 107 கோடியே 79 லட்சத்து 45 ஆயிரத்து  470 ரூபாய் இந்த திட்டத்திற்காக இதுவரை செலவிடப்பட்டுள்ளது.

இன்னுயிர் காப்போம் திட்டத்தின் செயல்பாடுகளை பார்த்து ஒன்றியஅரசு இதன் மாதிரி வடிவத்தை கேட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் இந்த திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளனர். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக, அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் புதிதாக  கட்டப்பட்ட கண் அறுவை சிகிச்சை மையம் மற்றும் கண்தான அரங்கு மற்றும் அறுவை  சிகிச்சை அரங்குகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.  நிகழ்ச்சியில் ராயபுரம் எம்எல்ஏ ஐட்ரீம் மூர்த்தி, மக்கள் நல்வாழ்வுத்துறை  செயலாளர் செந்தில்குமார், ஸ்டான்லி மருத்துவமனை டீன் பாலாஜி,  பேராசிரியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள்  உள்ளிட்டேர் கலந்து கொண்டனர்.

* சாலை விபத்து குறைந்தது சங்கர் ஜிவால்
சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் பேசுகையில், ‘‘கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் சாலை விபத்து 13 சதவீதம் குறைந்துள்ளது. 30 சதவீதம் நோயாளிகள் 48 மணி நேர சிகிச்சைக்கு பிறகு இறக்கின்றனர். இதை குறைக்க ஆலோசனை செய்ய வேண்டும். இன்னுயிர் காப்போம் திட்டத்தில் கூடுதலாக நிறைய மருத்துவமனைகள் சேர்க்கப்பட்டுள்ளது. 108 அவசர ஊர்திகள் உயர் சிகிச்சை தரும் தரமான மருத்துவமனைக்கு நோயாளிகளை அழைத்து வருவது முக்கியம். மருத்துவமனைகளை தரமானதாக்க வேண்டும். காவல் துறையினருக்கு பயிற்சி அளிப்பது அவசியம்’’ என்றார்.

Tags : World Accident Day ,Stanley ,Minister ,M. Subramanian , World Accident Day program at Stanley: Minister M. Subramanian advises public to come forward to help accident victims
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...