×

தமிழக சட்டப்பேரவையில் இந்தி மொழி திணிப்புக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்: தமிழர்களை 3ம் தர குடிமக்களாக்கும் முயற்சிக்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும்; தீர்மானத்தை முன்மொழிந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இந்தி மொழிக்கு எதிராக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது. அப்போது அவர், மொழி அடிப்படையில் இந்தியாவை மூன்றாக பிரித்து தமிழர்களை மூன்றாம் தர குடிமக்களாக்கும் ஒன்றிய அரசின் முயற்சிக்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும் என்று பேசினார். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்தித் திணிப்புக்கு எதிராக அரசினர் தனித் தீர்மானம் கொண்டு வந்து ஆற்றிய உரை: ஆதிக்க மொழித் திணிப்புக்கு எதிராக என்றும் குரல் கொடுப்பவர்கள் நாம். தமிழ் காக்க சிறை சென்று மரணம் அடைந்த நடராசன் - தாளமுத்து தொடங்கி, தீக்குளித்த கீழப்பழுவூர் சின்னச்சாமி, துப்பாக்கிக் குண்டுக்குப் பலியான சிதம்பரம் ராசேந்திரன் வரையிலான தியாகிகளை இந்த நேரத்தில் நினைவுகூர்வது பொருத்தமாக இருக்கும் என நான் நினைக்கிறேன்.

1938ம் ஆண்டு முதல், இந்தி மொழித் திணிப்பு தொடர்ந்து கொண்டே இருக்கிறது. நாமும் எதிர்த்துக் கொண்டே இருக்கிறோம். ஆதிக்கச் சக்திகளும் விடுவதாக இல்லை; நாமும் விடுவதாக இல்லை. இது வெறும் மொழிப் போராட்டம் மட்டுமல்ல; தமிழினத்தை, தமிழர் பண்பாட்டைக் காக்கும் போராட்டமாக நாம் தொடர்ந்து கொண்டு இருக்கிறோம்; தொடரவே செய்வோம். ‘‘ஒரே நாடு - ஒரே மதம் - ஒரே தேர்தல் - ஒரே தேர்வு - ஒரே உணவு - ஒரே பண்பாடு’’- என்ற வரிசையில் ஒரே மொழியை வைத்து, மற்ற தேசிய இன மக்களின் மொழிகளை அழிக்கப் பார்க்கிறார்கள். இதில் மிகமிக முக்கியமானது, இந்தி மொழித் திணிப்பு. இந்திமொழித் திணிப்பை பட்டவர்த்தனமாக ஒன்றிய பா.ஐ அரசு செய்கிறது.
இந்தியும், ஆங்கிலமும்தான் அலுவல்மொழியாக இத்தனைகாலம் இருந்துவரும் நிலையில், ஆங்கிலத்தை மொத்தமாக அகற்றப் பார்க்கிறது பா.ஜ அரசு.

இந்த வரிசையில் கடந்த 13 ம் தேதி வெளியான செய்தியில், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் அமைக்கப்பட்ட அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழுவின் அறிக்கை, குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கை முழுக்க முழுக்க இந்தியின் ஆதிக்கத்தை வலுப்படுத்துவதாக அமைந்துள்ளது. ஆங்கிலத்தை முற்றிலுமாக தடுப்பதன் மூலம், ஆங்கில அறிவையே முற்றிலுமாகத் தடுக்கிறார்கள். மாநில மொழி என்று ஒப்புக்காகச் சொல்கிறார்களே தவிர, முழுக்க முழுக்க இந்திக்காகவே துடிக்கிறது அவர்களது இதயம். எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளையும், இந்திக்கு இணையான ஒன்றிய அரசின் அலுவல் மொழிகளாக அறிவிக்கத் தயாரா.

இந்தி பேசும் மாநில மக்களுக்கு மட்டும்தான் இனி அனைத்திந்திய பணி இடங்கள் என்பதை வெளிப்படையாக அறிவித்துவிட்டார்கள்.  இது எங்கே போய் முடியும் என்றால், இந்தி பேசாத மாநில மக்களை மொத்தமாக தேசிய நீரோட்டத்திலிருந்து அந்நியமாக்குவதில் போய்தான் முடியும். எட்டாவது அட்டவணையில் உள்ள தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளை இந்திய நாட்டின் ஆட்சி மொழி மற்றும் அலுவல் மொழிகளாக்க முயற்சிகள் எடுக்க வேண்டும். அதை விட்டுவிட்டு முழுக்க முழுக்க இந்திமயமாக்குவது சரியா என்பதுதான் நாம் எழுப்பும் கேள்வி.

தமிழ்நாட்டின் மொழிக் கொள்கை என்பது, தமிழும், ஆங்கிலமும் என்ற இருமொழிக் கொள்கை. தமிழகத்தில் இயங்கும் ஒன்றிய அரசின் அலுவலகங்களில் இணை அலுவல் மொழியாக தமிழை அங்கீகரித்து, அனைத்து அலுவலகச் செயல்பாடுகளும் தமிழிலேயே இயங்க உரிய சட்டத் திருத்தம் செய்ய வேண்டும். சென்னை உயர் நீதிமன்ற வழக்காடு மொழியாக தமிழை ஆக்க வேண்டும். இவைதான் நமது மொழிக் கொள்கை. இந்தித் திணிப்பை எதிர்ப்பதும், நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கையை நிராகரிப்பதும் இதனால்தான்.

இந்தி மொழி பயன்பாடு அடிப்படையில் இந்தியாவை இவர்கள் மூன்றாகப் பிரிக்கப் பார்க்கிறார்கள். 1.இந்தி மொழி பயன்பாடு அதிகம் உள்ள மாநிலங்கள், 2.இந்தி மொழி பயன்பாடு குறைவான மாநிலங்கள், 3.இந்தி பேசாத மாநிலங்கள்.இதில் நாம் மூன்றாவதாக இருக்கிறோம். ஆனால், பெரும் மொழி மற்றும் பண்பாட்டிற்குச் சொந்தக்காரர்களாகிய நம்மை மூன்றாம்தர குடிமக்களாக ஆக்கிவிடப் பார்க்கும் முயற்சிகளுக்கு நாம் எதிர்க்குரல் எழுப்ப வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். பின்னர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்தி மொழி திணிப்புக்கு எதிராக சட்டப்பேரவையில் தனி தீர்மானத்தை கொண்டு வந்து முன்ெமாழிந்தார். அப்போது அவர் பேசியதாவது, ‘‘ இந்திக்குத் தாய்ப்பாலும், இந்தியாவின் மற்ற மொழிகளுக்குக் கள்ளிப் பாலும் புகட்ட நினைப்பது, இந்திய அரசியல் சட்டத்துக்கு எதிரானது.

இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்குப் பேராபத்தை விளைவிக்கக் கூடியது என்பதால் பின்வரும் தீர்மானத்தை நான் முன்மொழிகிறேன்: ‘‘ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சராகவும், அலுவல் மொழி தொடர்பான பாராளுமன்றக் குழுத் தலைவராகவும் உள்ள அமித் ஷா தலைமையிலான குழு சமீபத்தில் குடியரசுத் தலைவரிடம் அளித்துள்ள அறிக்கை இன்று நாடு முழுவதும் விவாதத்திற்கு உள்ளாகியிருக்கிறது. அந்தப் பரிந்துரைகளில், ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., எய்ம்ஸ் மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் ஆங்கிலத்திற்கு பதில் இந்தி மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும்; இந்தியை பொது மொழியாக்கிடும் வகையில், தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்பம் சாராத கல்வி நிறுவனங்கள், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உள்ளிட்ட ஒன்றிய அரசின் அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் இந்தி மொழியே பயிற்று மொழியாக ஆக்கப்பட வேண்டும்; இளைஞர்களின் வேலைவாய்ப்பில், கட்டாயத் தாள்களில் ஆங்கிலத்தை நீக்கி விட்டு, இந்தியை மட்டுமே முதன்மைப்படுத்த வேண்டும்; என்பன உள்ளிட்டவையும் அடங்கும்.

இந்தப் பரிந்துரைகளை ஏற்கக் கூடாது, நடைமுறைபடுத்தக் கூடாது என பிரதமருக்கு கடந்த 16-10-2022ல் தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.இந்த சட்டப் பேரவையில் அண்ணா, கொண்டு வந்து நிறைவேற்றிய இரு மொழிக் கொள்கை தீர்மானத்திற்கு எதிராக, பிரதமர் நேரு இந்தி பேசாத மாநிலங்களுக்கு அளித்த வாக்குறுதிக்கு மாறாக, 1968 மற்றும் 1976 ம் ஆண்டுகளில் அலுவல் மொழி தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் அதன் அடிப்படையில், ஆங்கில மொழி பயன்படுத்துவது உறுதி செய்யப்பட்டுள்ளதற்கும் எதிராக, இப்போது அளிக்கப்பட்டுள்ள பாராளுமன்றக் குழுவின் பரிந்துரைகள் அமைந்திருப்பது கவலைக்குரியதாக இப்பேரவை கருதுகிறது.

அன்னைத் தமிழ்மொழியைக் காத்திட, ஆங்கிலம் அலுவல் மொழியாக தொடரவும், அரசமைப்பு சட்டத்தின் 8-வது அட்டவணையில் உள்ள 22 மொழிகளையும் அழியாமல் காக்க, இந்தி பேசாத மாநில மக்களின் உரிமைகளை நிலைநாட்ட தமிழ்நாடு மீண்டும் முன்னோடி மாநிலமாக நிற்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. அலுவல் மொழி தொடர்பான பாராளுமன்றக் குழுத் தலைவரால் கடந்த 9-9-2022 ல் குடியரசுத் தலைவரிடம் அளிக்கப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளுக்கும், அம்மொழிகளைப் பேசும் மக்களின் நலனுக்கு எதிராகவும் வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தக் கூடாது என ஒன்றிய அரசினை இந்தப் பேரவை வலியுறுத்துகிறது. பேரவையில் இருமொழிக் கொள்கையை நிறைவேற்றிய அண்ணாவின், அதே உணர்வுடன், இந்தத் தீர்மானத்தைத் தற்போது முன்மொழிந்துள்ளேன். இதையடுத்து, இந்த தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்தும் வரவேற்றும், சட்ட மன்ற உறுப்பினர்கள் பேசினர். பின்னர் சட்டப் பேரவையில் இந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது. அமித்ஷா அறிக்கை முழுக்க முழுக்க இந்தியின் ஆதிக்கத்தை வலுப்படுத்துவதாக அமைந்துள்ளது.


Tags : Tamil Nadu Legislative Assembly ,Tamils ,Chief Minister ,M. K. Stalin , Unanimous passage of resolution against imposition of Hindi language in Tamil Nadu Legislative Assembly: Raise voice against attempt to make Tamils 3rd class citizens; Chief Minister M. K. Stalin's speech proposing the resolution
× RELATED மகளிர் நோய்களும் சித்த மருத்துவமும்!