×

கல்லூரி மாணவி கொலை; எங்கள் புகாரின் மீது நடவடிக்கை எடுத்து இருந்தால், எனது மகள் இன்று உயிருடன் இருந்து இருப்பாள்: தாய் ராமலட்சுமி சிபிசிஐடி போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம்

சென்னை: கல்லூரி மாணவியை ரயில் முன்பு தள்ளி கொலை செய்த விவகாரத்தில், எங்கள் புகாரின் மீது முதலிலேயே போலீசார் நடவடிக்கை எடுத்து இருந்தால் இன்று எனது மகள் உயிருடன் இருந்து இருப்பாள் என கல்லூரி மாணவியின் தாய் ராமலட்சுமி சிபிசிஐடி போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
சென்னை ஆலந்தூரில் உள்ள காவலர் குடியிருப்பை சேர்ந்தவர் சத்யா(20). கல்லூரி மாணவியான இவர், கடந்த வியாழக்கிழமை தனது தோழியுடன் கல்லூரிக்கு செல்ல பரங்கிமலை ரயில் நிலையத்திற்கு வந்தார். அப்போது, அவரது காதலன் சதீஷ் என்பவர் சத்யாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

திடீரென யாரும் எதிர்பார்க்காத நிலையில் சத்யாவை ரயில் முன்பு தள்ளி கொடூரமாக படுகொலை செய்தார். இதுகுறித்து மாம்பலம் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து காதலன் சதீஷை கைது செய்து நீதிமன்ற உத்தரவுப்படி வரும் 28ம் தேதி வரை புழல் சிறையில் அடைத்தனர். பின்னர் மாம்பலம்     ரயில்வே காவல் நிலையத்தில் இருந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார். அதைதொடர்ந்து சிபிசிஐடி போலீசார் கடந்த சனிக்கிழமை தனது கல்லூரி மாணவி சத்யா வழக்கை கையில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

2 நாட்களாக சிபிசிஐடி போலீசார் பரங்கிமலை ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி பதிவுகள் மற்றும் சத்யா வசித்து வந்த ஆலந்தூர் காவலர் குடியிருப்பு வாசிகள், குற்றவாளி சதீஷ் வாட்ஸ் அப் குழு நண்பர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. அதேநேரம், நேற்று மாலை சம்பவத்தன்று ரயிலை இயக்கி வந்த டிரைவர் கோபாலிடமும் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்தனர். மேலும், இந்த வழக்கில் உயிரிழந்த சத்யாவின் தாயார் ராமலட்சுமியிடம் நேற்று இரவு சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது, அவர் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது: எனது மகள் சிறு வயதில் இருந்தே, தயாளன் மகன் சதீஷுடன் நல்ல பழக்கத்தில் இருந்து வந்தார். நாங்கள் சொந்த குடும்ப உறுப்பினர் போல் தான் பார்த்தோம். எனது மகள் பெரியவளாக ஆனபிறகும் சதீஷ் எனது மகளுடன் பழகி வந்தார். பெரியவளாக ஆன பிறகு பழையபடி சதீஷை நாங்கள் எங்கள் மகளுடன் பழகுவதை விரும்பவில்லை. இதை அவரது தந்தை தயாளனிடமும் கூறி சதீஷை படிப்படியாக எனது மகளுடன் பழகுவதை நிறுத்தும்படி கூறினோம்.

ஆனால் சதீஷ் எனது மகளை காதலித்து வந்துள்ளார். இதுகுறித்தும் நாங்கள் அவரது தந்தையிடம் கூறினோம். நானும் பல நேரங்களில் நேரில் அழைத்து சிறு வயதில் பழகியது வேறு, தற்போது பழகுவது வேறு... குடியிருப்பில் பார்ப்பவர்கள் பல விதமாக எனது மகளை பேசி வருகின்றனர். இதனால் நீ எனது மகளை விட்டு விலகிவிடு என்று கூறினேன். அவனும் அதற்கு சம்மதம் தெரிவித்து விலகுவதாக கூறி தொடர்ந்து எனது மகளை தொந்தரவு செய்து வந்தான். கடந்த மே மாதம் எனது மகளை அவரது கல்லூரிக்கு சென்று தன்னை காதலிக்கும்படி கூறி தாக்கியுள்ளார்.

இதுகுறித்து நாங்கள் மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தோம். போலீசார் எங்கள் இரண்டு குடும்ப உறுப்பினர்களை அழைத்து சமாதானம்  பேசி அனுப்பி வைத்தனர். பிறகு வீட்டின் அருகே தகராறு செய்தான். அதுகுறித்து நாங்கள் பரங்கிமலை காவல்நிலையத்திலும் புகார் அளித்தோம். ஆனால் எங்கள் புகாரின் படி போலீசார் அப்போதே சதீஷை கைது செய்து நடவடிக்கை எடுத்து இருந்தால் இன்று எனது மகள் உயிருடன் இருந்து இருப்பார். எனது கணவரும் இறந்து இருக்க மாட்டார். எனது மகள் மற்றும் கணவர் இறப்புக்கு காரணமான சதீசுக்கு கடுமையான தண்டனை பெற்று தர வேண்டும். இனி இதுபோன்ற சம்பவம் வேறு யாருக்கும் நடக்க கூடாது. இவ்வாறு வாக்குமூலம் அளித்ததாக சிபிசிஐடி போலீசார் கூறினார்.

Tags : Ramalakshmi ,CPCID , College student murder; Had action been taken on our complaint, my daughter would have been alive today: mother Ramalakshmi's sensational confession to CBCID police
× RELATED எட்டயபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் மகளிர் தினவிழா