×

செல்போன் ‘மிஸ்டு காலில்’ உருவான கள்ளக்காதல் கணவர், 2 மகன்களை உதறிவிட்டு வந்த சென்னை பெண் கழுத்து நெரித்து கொலை: தற்கொலைக்கு முயன்ற லாரி டிரைவர் கைது; திருவண்ணாமலை அருகே அதிர்ச்சி சம்பவம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே கள்ளக்காதலியின் கழுத்தை நெரித்து கொலை செய்து, தற்கொலைக்கு முயன்ற லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர். செல்போன் ‘மிஸ்டு காலில்’ உருவான கள்ளக்காதல், கொலையில் முடிந்தது. திருவண்ணாமலை அடுத்த கண்ணக்குறுக்கை கிராமத்தை சேர்ந்தவர் தங்கராஜ்(36), லாரி டிரைவர். இவருக்கு மனைவி மற்றும் 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். சென்னை மாங்காடு பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் பார்த்தசாரதி மனைவி நதியா(32). இவருக்கு, இரண்டு மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில், செல்போன் ‘ராங் கால்’ மூலம் தங்கராஜிக்கும், நதியாவுக்கும் இடையே அறிமுகம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, செல்போனில் இருவரும் பேசியதால், கள்ளக்காதலாக வளர்ந்தது. லாரி டிரைவர் தங்கராஜ், அடிக்கடி சென்னைக்கு சென்று நதியாவை சந்தித்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளாக இருவரும் நெருக்கமாக பழகியுள்ளனர். இந்த கள்ளக்காதல் விவகாரம் நதியாவின் கணவருக்கு தெரிந்ததால், கண்டித்துள்ளார். எனவே, கடந்த 20 நாட்களுக்கு முன்பு, இரண்டு குழந்தைகளுடன் நதியா வீட்டைவிட்டு வெளியேறினார். பின்னர், தண்டராம்பட்டு பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து நதியாவும், தங்கராஜும் குடும்பம் நடத்தியுள்ளனர்.

அதைத்தொடர்ந்து, கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு, இரண்டு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு மீண்டும் மாங்காடு சென்ற நதியா, குழந்தைகளை கணவரிடம் விட்டுவிட்டு, நேற்று முன்தினம் இரவு தங்கராஜின் சொந்த கிராமத்துக்கு வந்தார். கணவர் வேறொரு பெண்ணுடன் வீட்டுக்கு வந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த தங்கராஜின் மனைவி ரேகா, இருவரையும் உள்ளே அனுமதிக்காமல் விரட்டியடித்தார். அதைத்தொடர்ந்து, தங்கராஜிம் நதியாவும் பெரியகோலாப்பாடி கிராமத்தில் உள்ள முருகர் கோயில் பகுதிக்கு சென்றனர். அங்கு, இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

வீட்டுக்கு அழைத்துச்செல்லாவிட்டால் தற்கொலை செய்துகொள்வேன் என நதியா மிரட்டியுள்ளார். அதனால், ஆத்திரம் அடைந்த தங்கராஜ், சேலையால் கழுத்தை நெரித்து நதியாவை கொலை செய்துள்ளார். அப்போது, கிராம மக்கள் வருவதை பார்த்து, மின் கம்பத்தில் ஏறி தற்கொலை செய்ய முயன்றுள்ளார். உடனடியாக, பொதுமக்கள் அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து, திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து, தங்கராஜை கைது செய்தனர். செல்போன் மிஸ்டு காலில் மலர்ந்த கள்ளக்காதல், கொலையில் முடிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Chennai ,Thiruvannamalai , Chennai woman strangled to death by fake husband in 'missed call' cell phone: Lorry driver arrested for attempting suicide; Shocking incident near Thiruvannamalai
× RELATED நடனமாடியபடி கிரிவலம் சென்று வழிபாடு சென்னை நாட்டிய குழுவினர்