×

பச்சைமலை மீது கொட்டித்தீர்த்த கன மழை: மருதையாறு, வெள்ளாற்றில் வெள்ளப்பெருக்கு

பெரம்பலூர்: பச்சைமலை மீது கொட்டித்தீர்த்த கன மழையால் கூட்டு மருதையாற்றில், வெள்ளாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றை கடக்க வேண்டாமென பொதுப்பணித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தின் மேற்கு எல்லையான பச்சை மலைப்பகுதியில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக வங்க கடலின் மேலே வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் இதன் தாக்கம் அதிகம் இல்லாவிட்டாலும் மாவட்டத்தின் மேற்கு எல்லையான பச்சை மலை தொடர்ச்சியில் லாடபுரம், மேலப்புலியூர், கோரையாறு, மேட்டூர், மலையாளப்பட்டி, அரும்பாவூர், பூலாம்பாடி, கள்ளப்பட்டி, கடம்பூர் பகுதிகளில் மலைமேல் கனமழை கொட்டி தீர்த்துள்ளது.

இதன் காரணமாக மலையாளப்பட்டி கல்லாற்றிலும், ஸ்வேதா நதி உப வடிநில பகுதி கூட்டு மருதை ஆற்றிலும், மாவட்டத்தின் வடக்கு எல்லையான வெள்ளாற்றிலும் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மலையாளப்பட்டி கூட்டு மருதை ஆற்றின் கரைகளில் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு வெள்ளநீர் விவசாய நிலங்களில் புகுந்து விவசாயிகள் பயிரிட்டிருந்த கருணை கிழங்கு, நிலக்கடலை, மக்காச் சோளம், கரும்பு பயிர்களை சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் சேதப்படுத்தி உள்ளது. பல இடங்களில் விவசாய நிலங்களில் மண் மேடிட்டும், மண் அரிப்புகள் ஏற்பட்டும் பலத்த சேதம் அடைந்துள்ளது. கிணறுகளில் வெள்ள நீர் புகுந்து சேதம் அடைந்துள்ளது.

விவசாயிகள் வயலில் வைத்திருந்த உர முட்டைகள் கரைந்து சேதமடைந்துள்ளது. இது குறித்து தமிழக விவசாயிகள் சங்க பெரம்பலூர் மாவட்ட செயலாளர் நீலகண்டன் தெரிவித்ததாவது: மலையாளப்பட்டி பகுதியில் கூட்டு மருதை ஆற்றின் திடீர் வெள்ளப்பெருக்கால் இதே பகுதியைச் சேர்ந்த கண்ணுசாமி(70), செல்வ ராணி(57), ஜெயராமன்(65), நடராஜன்(52), வீராசாமி(60) ஜெயகுமார்(46), செந்தில்குமார் (43) உள்ளிட்டப் பல்வேறு விவசாயிகளின் வயல்களில் பயிரிட்டிருந்த கருணைக்கிழங்கு, நிலக்கடலை, மக்காச்சோளம், கரும்பு பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 10க்கும் மேற்பட்ட பாசனக்கிணறுகள் மோட்டாருடன் மூழ்கி விட்டது.

இதுகுறித்து வேப்பந்தட்டை வட்டார வேளாண்மைத்துறையினர், வருவாய்த்துறையினர் கூட்டாக கள ஆய்வு செய்து பாதிப்பு விபரங்களை கண்டறிந்து இழப்பீடு பெற்றுத்தர வேண்டும் என தெரிவித்து ள்ளார். இதேபோல் மாவட்டத்தின் வடக்கு எல்லையாக திகழுகின்ற வெள்ளாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பெரம்பலூர் மாவட்ட நீர்வள ஆதார அமைப்பு உதவி செயற்பொறியாளர் வேல்முருகன் தெரிவித்திருப்பதாவது: வெள்ளாற்றில் உள்ள கடலூர் மாவட்டம், தொழுதூர் அணைக்கட்டு பகுதியில் நேற்று காலை 9மணி நிலவரப்படி வெள்ளாற்றில் நீர்வரத்து- வினாடிக்கு 3572 கன அடியாக உள்ளது. வெள்ளாற்றிலிருந்து வினாடிக்கு 543 கனஅடி நீர் வெளியேற்றம் செய்யப்படுகிறது. வெள்ளாற்றின் கரையோரம் உள்ள மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மேலிருந்து தண்ணீர் வரத்து அதிகம் உள்ளதால் வெள்ளாற்றை கடக்க வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

Tags : Pachamalai ,Maruthaiyar ,Vellaari , Heavy rains on Pachamalai: floods in Maruthaiyar, Vellaari
× RELATED மாயமான மாணவி உறவினர் வீட்டில் மீட்பு