எக்ஸ்பிரஸ் ரயில் சாதனையை தொடர்ந்து வைகை, பாண்டியன் ரயில்களின் வேகத்தை அதிகரிக்க முடிவு: ரயில் பயணிகள் வரவேற்பு

மதுரை: நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட மதுரை-சென்னை இடையே உள்ள தூரத்தை 6 மணி 34 நிமிடங்களில் கடந்து வைகை எக்ஸ்பிரஸ் சாதனை படைத்ததை தொடர்ந்து, மதுரையில் இருந்து இயக்கப்படும் வைகை மற்றும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலின் வேகத்தை 110 கிமீ.,லிருந்து 130 ஆக அதிகரிக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளதற்கு மதுரை ரயில் பயணிகள் வரவேற்றுள்ளனர். மதுரை- சென்னை இடையே இரவு நேர ரயிலாக பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பகல்நேர ரயிலாக வைகை எக்ஸ்பிரஸ் ரயில் கடந்த 1977 ஆக.15ம் தேதி சுதந்திர தினத்தன்று அறிமுகம் செய்யப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது. தினமும் காலை 7.10 மணிக்கு புறப்பட்டு, மதியம் 2.30 மணிக்கு சென்னைக்கு சென்றடையும். பாண்டியன் இரவு 8 மணிக்கு புறப்படும்.

இரு ரயில்களின் மொத்த பயண நேரம் 7 மணி 20 நிமிடங்கள். கடந்த அக்.15ம் தேதி மதுரையில் இருந்து காலை 7.10 மணிக்கு புறப்பட வேண்டிய வைகை ரயில், தவிர்க்க முடியாத காரணங்களால் 30 நிமிடங்கள் காலதாமதமாக 7.40க்கு புறப்பட்டது. இருப்பினும், சென்னைக்கு மதியம் 2.14 மணிக்கு சென்றடைந்து விட்டது. அவ்வகையில் மதுரை - சென்னை இடையேயான 497 கி.மீ. தூரத்தை 11 நிறுத்தங்களுடன் 6 மணி 34 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்துள்ளது. வைகை எக்ஸ்பிரஸ் ரயில் 22 பெட்டிகளையும் இழுத்துக்கொண்டு 11 நிறுத்தங்களில் நின்று சென்று சாதனை படைத்துள்ளது. வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் சாமானிய ஏழை, எளிய மக்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் உள்ளிட்ட அனைத்துத்தரப்பு மக்களும் பயணம் செய்ய முடியும். இந்த ரயிலை, தேஜஸ் ரயிலுக்கு இணையாக இயக்குவது மிகச்சிறப்பாக அமைந்துள்ளது.

இதையடுத்து மதுரையிலிருந்து புறப்படும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில், மதுரையில் இருந்து பெங்களூருக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களின் வேகத்தை தற்போதுள்ள 110 கி.மீ. லிருந்து 130 கி.மீ. ஆக அதிகரிக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளதாக ரயில்வே உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அதற்கு மதுரை ரயில் பயணிகள் வரவேற்றுள்ளனர். ரயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘வேகத்தை 130 கி.மீ. ஆக அதிகரிக்க ஆலோசனை நடந்து வருகிறது. அப்படி வேகத்தை அதிகரிக்கும் போது சிக்னல் சிஸ்டங்களை மாற்றியமைக்க ேவண்டும். சிகப்பு விளக்கு விழும் போது அது குறித்த தகவல் ரயில் டிரைவருக்கு 3 கி.மீ., தூரம் முன்பாகவே சிக்னல் தெரிய வேண்டும். இதுபோன்ற பல்வேறு வகைகளிலும் சிக்னலை அதிநவீனமாக மாற்ற வேண்டும்\” என்றார். ரயிலை இயக்கிய ஓட்டுநர் ரவிசங்கர் கூறுகையில், \”வைகை ரயிலை இயக்குவது சாதாரண காரியம் கிடையாது.

அதன் கால அட்டவணை ஓட்டுநருக்கு சவாலானது. நிர்ணயித்த 110 கி.மீ., வேகத்தை மீறாமல் ரயிலை இயக்க வேண்டும். மதுரை-விழுப்புரம் இடையே உள்ள 6 நிறுத்தங்களில் பயணிகளை பாதுகாப்பாக இறக்கி ஏற்றி, குறித்த நேரத்தில் ரயிலை இயக்குவதும் எளிதல்ல. ரயில் விழுப்புரத்திற்கு 9 நிமிடம் காலதாமதமாக சென்றது. அங்கிருந்து விழுப்புரத்தைச் சேர்ந்த ஓட்டுநர் பாண்டியன், ரயிலை இயக்கி குறித்த நேரத்திற்கு முன்பாகவே சென்னைக்கு சென்று சேர்த்தார். இதற்கு ஒத்துழைப்பு அளித்த உதவி ஓட்டுநர் முத்துக்குமார், ரயில் மேலாளர் குமார் மற்றும் அனைத்து ரயில்வே ஊழியர்களுக்கும் நன்றி’’ என்றார். மதுரை-சென்னை இடையே இயக்கப்படும் தேஜஸ் ரயில் 6 மணி நேரம் 15 நிமிடங்களில் சென்னை செல்கிறது. வைகை எக்ஸ்பிரஸ் 7 மணி நேரம் 20 நிமிடங்களில் சென்னை செல்கிறது. தேஜஸில் நிறுத்தங்கள் மிக மிக குறைவு. மொத்தமே 3 நிறுத்தங்கள் மட்டுமே. ஆனால் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு நிறுத்தங்கள் 11 உள்ளன. தேஜஸ் ரயிலில் 15 பெட்டிகள் மட்டுமே இணைக்கப்பட்டு இயக்கப்படுகிறது. ஆனால் வைகையில் 22 பெட்டிகள் உள்ளன. தேஜஸ் ரயிலுடன் ஒப்பிடும் வகையில் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலை இயங்குவது மிகவும் சிறப்பானதாகும்.

Related Stories: