×

திருச்சி அருகே சோழர் கால கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு

முசிறி: திருச்சி- குளித்தலை சாலையில் அல்லூர் கோயிலில் சோழர்கால கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திருச்சி- குளித்தலை நெடுஞ்சாலையில் 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அல்லூர் பசுபதீஸ்வரர் கோயில் முதல் பாராந்தக சோழர் ஆட்சி காலத்தில் பொதுகாலம் 924 கட்டப்பட்டது. இங்கிருந்து அரசின் கல்வெட்டுதுறையால் 15 கல்வெட்டுகள் 1903 படி எடுக்கப்பட்டு பதிப்பிக்கப்பட்டுள்ளன. அவற்றின் பாடங்களை சரிபார்க்கவும், கட்டிடக்கலை நுட்பங்களை அறியவும் , கோயிலார் துணையுடன் இங்கு ஆய்வு மேற்கொண்ட திருச்சி தனியார் கல்லூரி வரலாற்று துறை தலைவர் நளினி, முசிறி அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி வரலாற்று துறை உதவி பேராசிரியர் அகிலா ஆகியோர் புதிய கல்வெட்டு ஒன்றையும், ஏற்கனவே படி எடுக்கப்பட்ட கல்வெட்டு ஒன்றின் விட்டுப்போன பகுதிகளை கண்டறிந்துள்ளனர்.

இதுகுறித்து வரலாற்று ஆய்வு மைய இயக்குனர் டாக்டர் கலைக்கோவன் கூறுகையில், பசுபதீஸ்வரர் கோயில் கட்டப்பட்ட காலத்தில் இறையகம் அதன் முன் ஒரு மண்டபம் என இரு கட்டுமானங்கள் இருந்தன. இந்நாளில் தெற்கிலும் வடக்கிலும் கற்சுவர்கள் அமைத்து இம்மண்டபத்தை இறையகத்துடன் இணைத்துள்ளனர். இங்கு உள்ளார் போல் இறையகத்தின் முன் தனிமண்டபம் அமைக்கும் பழக்கம் பல்லவர்கால பழமையானது. காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் , மாமல்லபுரம் கடற்கரை கோயில் ஆகியவற்றில் இம்மரபு பின்பற்றப்பட்டுள்ளது. முற்சோழர் காலத்தில் இம்மரபின் தொடர்ச்சியாக இறையகங்களின் முன் தனி மண்டபங்கள் அமைக்கப்பட்டவை இப்ப புதிய கல்வெட்டால் தெரிய வருகிறது. தென்புறம் பொறிக்கப்பட்டுள்ள இக்கல்வெட்டு இப் பகுதியை ஆட்சி செய்த மதுராந்தகன் ஒற்றி எனும் கொடும்பாளூர் வேளிர் குல அரசரின் பெயரால் எடுப்பிக்கப்பட்டது.

அல்லூரில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த வீரநாராயணபுரத்து வணிகரான முனைச்சுடர் விரையாச்சிலை இக்கட்டுமானத்தை எழுப்பியுள்ளார். மண்டபத்தின் வடமேற்கு சுவர்களில் உள்ள மற்றொரு கல்வெட்டு வேளிர் அரசர் ஒற்றி மதுராந்தகன் அல்லூர் ஊராருக்கு அனுப்பிய அரசு ஆனையாக அமைந்துள்ளது. மண்டபத்தை எடுப்பித்த முனை சுடர் விரையாச்சிலை, இறைவனுக்கு தேவியாக உமையன்னையின் செப்பு திருமேனியை இக்கோயிலில் எழுந்தருளிவித்தார். இறைவிக்கான வழிபாடு, படையல்களுக்காக அவர் விலைக்கு பெற்று கோயிலுக்கு அளித்த தோட்ட நிலத்தின் எல்லைகளை வரையறுத்து அதன் மீதான வரிகளை நீக்கும்படி ஊராட்சி அலுவலர்களுக்கு அரசாணை அறிவுறுத்தியது. மன்னரின் ஆணையுடன் வந்த இந்த ஓலையை ஊரால் எப்படி வரவேற்று படித்து அதன் உள்ளீட்டை நிறைவேற்றினர் என்பதையும் இக்கல்வெட்டால் அறிய முடிகிறது. இக்கல்வெட்டுகளின் கண்டுபிடிப்பு பற்றிய தகவல் கல்வெட்டு துறையினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Trichy , Discovery of Chola inscriptions near Trichy
× RELATED திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே...